கொவிட்-19 கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட திருமண நிகழ்வுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகள் சமரசத்தை எட்ட உதவ சட்ட அமைச்சு முன்வந்துள்ளது.
அந்தத் திருமண விழாக்கள் இவ்வாண்டு மே 8ஆம் தேதிக்கும் ஜூலை 31ஆம் தேதிக்கும் இடையே நடத்தத் திட்டமிடப்பட்டிருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, திருமணத் தேதியை மாற்றுவது அல்லது பொருள், சேவை வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தைக் குறைப்பது தொடர்பில் மணமக்களுக்கும் ஒப்பந்ததாரர்க்கும் இடையே உடன்பாடு எட்டப்படாமல் போனால் சமரசம் காண உதவி வழங்கப்படும்.
இவ்வாண்டு மே 16ஆம் தேதி முதல் இம்மாதம் 11ஆம் தேதி வரை திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இருதரப்பினரும் உடன்படுவதாக இருந்தால், பிரச்சினையில் சமரசத்தை எட்ட வழிவகை செய்வதற்கு அமைச்சால் நியமிக்கப்பட்ட பயிற்சிபெற்ற வல்லுநர் ஒருவர் உதவுவார். இந்தச் சமரச உதவி இலவசமாக வழங்கப்படும். இதன்மூலம், பிரச்சினைக்குத் தீர்வுகாண நீதிமன்றத்தை நாடுவது தவிர்க்கப்படலாம்.
ஆர்வமுடைய தரப்பினர் இன்று முதல் வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதிவரை https://go.gov.sg/request-for-mediation என்ற இணையப் பக்கம் வழியாக தங்களது கோரிக்கைகளை முன்வைக்கலாம்.
கோரிக்கை விடுக்கப்பட்ட இரு வாரங்களுக்குள் சமரசப் பேச்சுக்கான அமர்வை நடத்த சட்ட அமைச்சு இலக்கு கொள்ளும். பொதுவாக, அந்த அமர்வு இணையம் வழியாக, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நடத்தப்படும்.

