முன்னாள் குற்றவாளிகள் சரியான பாதையில் செல்லவும் குற்ற வழிகளுக்குத் திரும்பாதிருக்கவும் உதவும் உத்திகள் தொடர்பில் பொதுமக்கள் கருத்துரைக்க நேற்று தொடங்கிய மூன்று நாள் மெய்நிகர் உச்சநிலை மாநாடு வாய்ப்பளித்து உள்ளது.
'கேர்' எனப்படும் முன்னாள் குற்றவாளிகள் மறுவாழ்விற்கான சமூகச் செயல்பாட்டு அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இம்மாநாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட ஏறக்குறைய 500 பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் குற்றவாளிகளுக்கான வேலைவாய்ப்பு, அவர்களின் குடும்பத்தினர்க்கு ஆதரவு வழங்குதல் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறும்.
மாநாட்டின் அறிமுக நிகழ்ச்சியில் தொடக்கவுரை ஆற்றிய உள்துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ, இப்போதைய கொவிட்-19 சூழலில் வேலைவாய்ப்புகளையும் தாண்டி முன்னாள் குற்றவாளிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினர்க்குமான ஆதரவை வலுப்படுத்தும் திட்டங்கள் குறித்துப் பேசினார்.
"கடந்த ஓராண்டுகாலம் நம் அனைவர்க்கும் சவால்மிக்கதாக இருந்து வருகிறது. கொவிட்-19 பரவல் ஏற்படுத்தியுள்ள சவால்களுக்கு இடையே, முன்னாள் குற்றவாளிகளும் அவர்களின் குடும்பத்தினரும் தங்களது மறுவாழ்வு, சமூகத்துடனான ஒருங்கிணைப்புப் பயணத்தைத் தொடர வேண்டும்," என்றார் திருவாட்டி டியோ.
"குற்றப் பாதைக்குத் திரும்பாமல் தடுக்கும் வகையில், முன்னாள் குற்றவாளிகளுக்கு ஆதரவு வழங்குவது 'கேர்' அமைப்பின் அடுத்த இலக்கு. இப்போது, முன்னாள் குற்றவாளிகளில் பத்தில் நான்கு பேர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஐந்தாண்டுகளுக்குள் மீண்டும் சிறைக்குத் திரும்பிவிடுகின்றனர். அவர்கள் மீண்டும் குற்றம் புரிவதைத் தடுக்க நாம் இன்னும் அதிகம் செய்ய வேண்டும்," என்று தொடர்பு, தகவல் அமைச்சருமான திருவாட்டி டியோ கூறினார்.
மீண்டும் குற்றப் பாதைக்குத் திரும்பும் முன்னாள் குற்றவாளிகளின் விகிதத்தைக் குறைக்க 'கேர்' அமைப்பு கவனம் செலுத்திவரும் முக்கிய அம்சங்களையும் அவர் குறிப்பிட்டார்.
சிறையில் இருக்கும்போதும் அதன்பின்னும் கைதிகளுக்கான மறுஒருங்கிணைப்பையும் ஆதரவையும் வலுப்படுத்தும்விதமாக, சிங்கப்பூர் போதைப்பொருள் தடுப்புச் சங்கம், தொழிலியல், கூட்டுறவு சேவைகள் சங்கம் ஆகிய இரு பங்காளிகளுடன் இணைந்து கடந்த ஜனவரியில் ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
'பிரேக் த சைக்கிள் எஸ்ஜி', 'கேன்வாஸ் ஆர்ட்ஸ்' போன்ற தன்னார்வக் குழுக்களில் இணையும்படி முன்னாள் குற்றவாளிகளை ஊக்குவிப்பதே அத்திட்டத்தின் நோக்கம்.
முன்னதாக, சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் சிறைச்சாலைப் பள்ளியில் வழங்கிவரும் பட்டப் படிப்புகளுக்குத் தகுதிபெறும் சிறைக்கைதிகளுக்கு நிதியுதவி வழங்கும் விதமாக, மஞ்சள் நாடா நிதி, சிங்கப்பூர் சீனக் குலமரபுச் சங்கக் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் கடந்த பிப்ரவரியில் 'கேர்' அமைப்பு ஓர் ஒத்துழைப்பைச் செய்துகொண்டது.
அதன்படி, உயர்கல்வியைத் தொடரும் கைதிகளுக்கு 100% வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் நிலவரப்படி, 11 கைதிகளுக்கு அத்தகைய ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது.

