அனைத்துலக எஃகு தொழில்துறை தனது கரிம வெளியீட்டுக் குறைப்பு இலக்குகளை எட்டுவதற்கான உதவிகள் தொடரும் என்று சிங்கப்பூர் பங்குச்சந்தை தெரிவித்துள்ளது.
உலகளவில் கரியமிலவாயு வெளியீட்டில் எஃகு துறையின் பங்கு கிட்டத்தட்ட பத்து விழுக்காடாக இருந்து வருகிறது.
"பங்குதாரர்களின் எதிர்பார்ப்புகள் மாறி வருகின்றன. வளர்ச்சியோடு சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் சார்ந்த காரணிகளுடன் ஒரு சமநிலையைப் பேணுவது நிறுவனங்களுக்கு முன்னெப்போதையும்விட முக்கியமானதாகி வருகிறது," என்று நேற்று இடம்பெற்ற இவ்வாண்டின் சிங்கப்பூர் அனைத்துலக இரும்பு வாரத்தின் தொடக்க விழாவின்போது பங்குச்சந்தையின் தலைவர் குவா சொங் செங் குறிப்பிட்டார்.
இந்த இலக்கில் ஏற்கெனவே சற்று முன்னேற்றம் எட்டப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், எஃகு தயாரிப்பில் புதிய செயல்முறைகள் குறித்து பல நிறுவனங்கள் ஆராய்ந்து வருவதாகவும் சொன்னார்.
மெய்நிகர் முறையில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மனிதவள அமைச்சரும் வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சருமான டான் சீ லெங், பிஎச்பி உட்பட உலகின் ஆறு முன்னணி எஃகு தயாரிப்பு நிறுவனங்களுடன் சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் அண்மையில் ஒரு புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டு இருப்பதைச் சுட்டினார்.

