ஓய்வுபெற்றவர்களே பணவீக்கம் காரணமாகக் கடந்த ஆண்டில் ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்டதாகச் சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
வேலை செய்யாத, 65 வயதும் அதற்கு மேற்பட்டோரையும் மட்டும் கொண்டுள்ள குடும்பங்களின் ஒட்டுமொத்த பணவீக்கம் சென்ற ஆண்டில் 0.1% கூடியது.
உணவுப்பொருள்களுக்கும் தங்குமிடத்திற்கும் அவர்கள் அதிகம் செலவிட வேண்டியிருந்ததே இதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. ஒட்டுமொத்தத்தில் அவர்கள் வீடமைப்பு, மின்சாரம், தண்ணீர்ப் பயன்பாடு, உணவு, சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றுக்காக 72.5% செலவிட்டனர்.
இதனிடையே, சிறுபிள்ளைகளைக் கொண்டுள்ள குடும்பங்கள், வருமானம் ஈட்டுவோரில் கடைசி 20 விழுக்காட்டினர், இடைநிலையில் இருக்கும் 60 விழுக்காட்டினர், முதலிடத்தில் இருக்கும் 20 விழுக்காட்டினர் என மற்ற அனைத்துப் பிரிவினரிடத்திலும் பணவீக்கம் 0.1% முதல் 0.4% வரை குறைந்தது.
ஆக அதிகமாக, சிறுகுழந்தைகளைக் கொண்டுள்ள குடும்பங்களில் பயனீட்டாளர் விலை 0.4% குறைந்தது. கடந்த ஆண்டு ஜனவரியில் பாலர் பள்ளிக் கட்டணச் சலுகை மேம்படுத்தப் பட்டதே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
முன்னோடித் தலைமுறைத் திட்டம், மெர்டேக்கா தலைமுறைத் திட்டத்தின்கீழ் சலுகைகள் வழங்கப்பட்டதால் 2015 முதல் 2019 வரை ஓய்வுபெற்றோர் குடும்பங்களில் பணவீக்கம், மற்ற பிரிவினரைவிடக் குறைவாக இருந்தது.

