தொழில்முனைவராவதில் பல்கலை மாணவர்கள் ஆர்வம்
சிங்கப்பூரில் பல்கலைக்கழக மாணவர்கள் தொழில்முனைவராவதில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். அதனையொட்டி தொழில்முனைவர் பயிற்சித் திட்டங்களில் பலர் சேர்ந்துவருகின்றனர்.
சென்ற மாத இறுதி வரை 680க்கும் அதிகமானோர் தனது தொழில்முனைவர் பயிற்சித் திட்டத்தில் சேர்ந்துகொண்டதாக எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு தெரிவித்தது. அவர்களில் 20 விழுக்காட்டினர் புதிதாக பட்டக் கல்வி முடித்த மாணவர்கள் என்றும் அமைப்பு சொன்னது.
தொழில் தொடங்குவதில் அனுபவம் இல்லாதோருக்குப் பயிற்சியளிப்பதற்காக சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திட்டம் தொடங்கப்பட்டது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்பு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கான தொழில்முனைப்புத் திட்டங்களை நடத்திவருகின்றன.
கேட்டது 4 மில்லியன் வெள்ளி, கிடைத்ததோ 40,000 வெள்ளி
தன்னை அவதூறாகப் பேசியதாகப் புகார் செய்து நான்கு மில்லியன் வெள்ளி இழப்பீட்டுத் தொகையைப் பெற முயன்ற கணவரை இழந்த பெண்ணுக்கு 40,000 வெள்ளி மட்டுமே வழங்கப்பட்டது.
தனது மாமனாரின் இறுதிச் சடங்கிலும் குடும்பத்தின் வாகன விற்பனைத் தொழில் நடக்கும் இடத்திலும் தன்னை அவதூறாகப் பேசியதாக மறைந்த தனது கணவரின் சகோதரி மீது 48 வயதான திருவாட்டி லிம் சியூ லிங் வழக்கு தொடர்ந்தார்.
தன்னைக் கேவலமான பெண் என்றும் குடும்பத் தொழிலிலிருந்து பணத்தைக் களவாடியதாகவும் 57 வயதான நியோ சூன் சியேன் குற்றஞ்சாட்டியதாக அவர் சொன்னார்.
திருவாட்டி லிம்மின் சில இழப்பீட்டுக் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மற்ற கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.
அவர் இவ்வளவு பெரிய இழப்பீட்டுத் தொகையைக் கேட்கும் அளவிற்கு விவகாரம் மோசமானதல்ல என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் சொன்னார்.
பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு
பல்கலைக்கழக வளாகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து தனது கைபேசியின் காணொளி பதிவு முறையைக் கொண்டு ஒரு பெண்ணைத் தவறாகப் பார்க்க முயன்றதாக நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சந்தேகிக்கப்படுகிறார்.
செம்பவாங் வேக்கு அருகே உள்ள அடுக்குமாடி வீடு கட்டடத்தின் மின்தூக்கியில் ஒரு பெண்ணைத் தவறான முறையில் படமெடுத்ததாக நிக்கலஸ் டான் சியூ சை சந்தேகிக்கப்படுகிறார். தற்போது அவருக்கு வயது 25.
ரகசியமாக ஆபாசப் படமெடுத்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளும் சட்டவிரோதமாக ஓரிடத்திற்குள் நுழைந்ததாக ஒரு குற்றச்சாட்டும் நிக்கலஸ் மீது பதிவாகியுள்ளன.
அவரின் மனநல அறிக்கை இன்னும் தயாராகவில்லை என்று மாவட்ட நீதிமன்றம் ஒன்று தெரிவித்தது. அடுத்த மாதம் 16ஆம் தேதியன்று அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.
'ஃபெராரி' பெண்மணியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது
தனது முன்னாள் கணவருக்கு சுமார் 430,000 வெள்ளித் தொகையை வழங்குவதைத் தவிர்க்க முயன்ற 'ஃபெராரி' பெண்மணியால் அவ்வாறு செய்யமுடியாமல் போனது.
2016ல் ஆர்ச்சர்ட் ரோட்டில் தனது ஃபெராரி காரை நிறுத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய 75 வயது ஷி கா யீ, தனது முன்னாள் கணவரான 73 வயது பேட்ரிக் தியோ சோங் ஙீக்கு அந்தத் தொகையை வழங்கவேண்டும் என்று கடந்த மே மாதத்தில் உத்தரவிடப்பட்டிருந்தது.
2018ஆம் ஆண்டில் இருவருக்கும் இடையிலான சுமார் 40.5 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள சொத்தைப் பிரித்துக்கொள்வதன் தொடர்பில் அவ்வாறு உத்தரவிடப்பட்டது.
அதை அகற்றுமாறு அவர் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

