மரினா ஸ்குவேர் கடைத்தொகுதியில் அமைந்திருக்கும் டைம்ஸ் நிறுவனத்தின் புத்தகக் கடை இம்மாதம் 21ஆம் தேதியன்று நிரந்தரமாக மூடப்படும்.
அந்தக் கடைத்தொகுதியில் அதற்கான குத்தகைக் காலம் நிறைவுக்கு வருகிறது.
இந்த ஆண்டு மூடப்படும் இரண்டாவது டைம்ஸ் புத்தகக் கடை இது. ஏற்கெனவே பேரகான் கடைத்தொகுதியில் அமைந்திருந்த டைம்ஸ் புத்தகக் கடை கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்டது.
இரண்டு கடைகளிலும் வாடிக்கையாளர்களும் விற்பனையும் குறைந்ததாக டைம்ஸ் தெரிவித்தது.
கொவிட்-19 கிருமிப் பரவல் நிலைமை மேலும் மோசமாக்கியதாக அது கூறிற்று. கிருமிப் பரவலால் சில்லறை வர்த்தகத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. புத்தகக் கடைகளும் அதில் அடங்கும். கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அதிரடித் திட்டம் சென்ற ஆண்டு செயல்படுத்தப்பட்டது.
அந்தக் காலக்கட்டத்தில் பெரும்பாலான சில்லறை வர்த்தகக் கடைகள் மூடப்பட்டதால் அவற்றின் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. முன்னதாக செண்டர்பாய்ன்ட் கடைத்தொகுதியில் அமைந்திருந்த டைம்ஸ் புத்தகக் கடை 2019ஆம் ஆண்டில் மூடப்பட்டது. 1983ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட அது, ஒரு காலத்தில் சிங்கப்பூரின் ஆகப் பெரிய புத்தகக் கடைகளில் ஒன்று.
டைம்ஸ் நிறுவனம் சிங்கப்பூரில் மேலும் ஏழு புத்தகக் கடைகளை நடத்திவருகிறது.
டைம்ஸ் ஜெலீடா, டைம்ஸ் பிளாஸா சிங்கப்பூரா, டைம்ஸ் வாட்டர்வே பாய்ன்ட் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
நிறுவனம் இணைய வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளது.
டைம்ஸ் மரினா ஸ்குவேர் 2006ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு வரை இயங்கியது. அதன் பிறகு சில காலம் அது மூடப்பட்டது, 2015ஆம் ஆண்டில் மீண்டும் திறக்கப்பட்டது.
கடையை மூடுவதற்கு முன் டைம்ஸ் சலுகை விலையில் அதன் பொருட்களை விற்கிறது.
இம்மாதம் 21ஆம் தேதி வரை டைம்ஸ் உறுப்பினர்கள் பொருட்களை 30 விழுக்காட்டு சலுகை விலையில் வாங்கலாம்.
உறுப்பினர் அல்லாதவர்கள் 20 விழுக்காட்டு சலுகை விலையில் வாங்கலாம். டைம்ஸ் கடையில் அடிக்கடி பொருட்களை வாங்கி வந்த சிலர் அது மூடவிருப்பதைக் கேள்விப்பட்டவுடன் தங்களின் வருத்தத்தைத் தெரிவித்தனர்.

