குறைந்த வயது உள்ள இரண்டு பெண்களுடன் பாலியல் உறவு ஓர் ஆடவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
அந்தப் பெண்களைக் கர்ப்பமாக்கியதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
சம்பந்தப்பட்ட பெண்களில் ஒருவருக்கு அப்போது வயது 12. அவர் பின்னர் கர்ப்பத்தைக் கலைத்துக்கொண்டார்.
மற்றொரு பெண்ணுக்கு அப்போது வயது 15.
அவர் குழந்தையைப் பெற்றெடுத்து வளர்க்கிறார். தற்போது 20 வயதான ஆடவர், சென்ற ஆண்டு வேறொரு 18 வயது பெண்ணை அடித்திருக்கிறார்.
அந்தப் பெண்ணுக்கும் அவருக்கும் பிறந்த ஒரு குழந்தை உள்ளது. மூன்று பெண்களும் ஆடவரின் காதலர்களாக இருந்தவர்கள்.
தற்போது மூவரும் அவருடன் தொடர்பில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரரான அந்த ஆடவர், குறைந்த வயது பெண்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாகப் பதிவான நான்கு குற்றச்சாட்டுகளையும் 18 வயது பெண்ணை அடித்ததாகப் பதிவான ஒரு குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்டார்.
2017க்கும் சென்ற ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் குற்றங்களைப் புரிந்தார்.
தீர்ப்பு வழங்கும்போது குறைந்த வயது பெண்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதன் தொடர்பில் அவர் மீது பதிவான மேலும் 15 குற்றச்சாட்டுகளும் கருத்திற்கொள்ளப்படும்.
இம்மாதம் 14ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 14 வயதுக்கு உட்பட்டவருடன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட ஒவ்வொரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு 20 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது மூன்றில் இரண்டு தண்டனைகள் விதிக்கப்படலாம்.

