இரண்டாவது காலாண்டில் 14.3% வளர்ச்சி; ஆண்டு வளர்ச்சி 4%-6% வரை

இரண்டாவது காலாண்டில் 14.3% வளர்ச்சி; ஆண்டு வளர்ச்சி 4%-6% வரை

2 mins read
9345ccfc-7fc4-4444-8707-465facca0709
-

சிங்கப்பூர் பொருளியல் சென்ற ஆண்டின் இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரைப்பட்ட மூன்று மாதங்களில் 14.3 விழுக்காடு வளர்ச்சி கண்டிருக்கிறது. வர்த்தக தொழில் அமைச்சு இன்று இதனை தெரிவித்தது. கொவிட்-19 காரணமாக சென்ற ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை பொருளியல் முடக்கம் நடப்பில் இருந்தது. அதனால் அந்தக் காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 13.3 விழுக்காடு சரிந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இரண்டாவது காலாண்டின் வளர்ச்சி ஒரு சாதனை அளவாக இருக்கிறது என்று அமைச்சு குறிப்பிட்டது.

இருந்தாலும் சரியாக்கங்களை அடுத்து காலாண்டு அடிப்படையில் சிங்கப்பூர் பொருளியல் இந்த ஆண்டின் 2வது காலாண்டில் 2 விழுக்காடு சுருங்கி இருக்கிறது. அது இந்த ஆண்டு முதல் காலாண்டில் 3.1% வளர்ந்திருந்தது.

துல்லியமான கணக்கீடுகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில், 2019 இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வளர்ச்சி 0.9 விழுக்காடு குறைவாகவே இருக்கிறது.

கொவிட்-19 காரணமாக பல கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்து வந்தாலும் சிங்கப்பூர் பொருளியல் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் மேம்பட்டுச் செல்வதாக பொருளியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இரண்டாவது காலாண்டின் வளர்ச்சி புளூம்பர்க் நிறுவனம் நடத்திய ஆய்வில் வல்லுநர்கள் முன்னுரைத்து இருந்த அளவைவிட கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது.

இந்நிலையில், சென்ற ஆண்டு நவம்பரில் கூறியபடியே இந்த ஆண்டுக்கான வளர்ச்சி 4% முதல் 6% வரை இருக்கும் என்று அமைச்சு இன்று மீண்டும் வலியுறுத்திக் கூறியது. சிங்கப்பூர் நாணய ஆணையம் சென்ற மாதம் ஓர் ஆய்வு முடிவை வெளியிட்டது. தடுப்பூசி இயக்கம் வேகம் அடைவதன் காரணமாக இந்த ஆண்டில் பொருளியல் வளர்ச்சி 6.5% வரை இருக்கும் என்று தனியார் துறை வல்லுநர்கள் முன்னுரைத்து இருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்தது.