உள்ளூர் ஊழியர்களை வேலையில் அமர்த்த முதலாளிகளுக்கு உதவும் அரசாங்க திட்டத்தின்கீழ் சென்ற ஆண்டு நவம்பர் முதல் மேலும் 140,000 உள்ளூர்வாசிகளுக்கு புதிய வேலைகள் கிடைத்துள்ளன.
மனிதவள அமைச்சு இன்று இதனை அறிவித்தது. இந்த ஆண்டு பிப்ரவரி நிலவரப்படி, 42,000 நிறுவனங்கள் 270,000 சிங்கப்பூர் குடிமக்களையும் நிரந்தரவாசிகளையும் வேலையில் சேர்த்தன. இதற்கு வேலை ஆதரவு ஊக்குவிப்புத் திட்டம் உதவியது.
வேலை பெற்ற சிங்கப்பூரர்களில் ஏறத்தாழ பாதிப் பேர், வேலை கிடைத்த நேரத்தில் வேலையின்றி இருந்தனர். மூன்றில் ஏறத்தாழ ஒரு பங்கினர் ஆறு மாதத்திற்கும் மேற்பட்ட காலம் வேலை இல்லாமலேயே இருந்து வந்தனர். ஏறக்குறைய 60 விழுக்காட்டினர் வேறு துறையில் முன்பு வேலை பார்த்தனர்.
வேலை வளர்ச்சி ஊக்குவிப்புத் திட்டம் இந்த ஆண்டு செப்டம்பர் வரை நீட்டிக்கப்படுகிறது. உள்ளூர் ஊழியர்களை வேலையில் சேர்க்கும் நிறுவனங்கள், ஓராண்டு காலத்திற்கு ஊழியர்களின் மொத்த மாதச் சம்பளத்தில் முதல் $5,000ல் 25 விழுக்காடு மானியத்தைப் பெற இத்திட்டம் உதவும்.
இந்தத் திட்டத்தின்கீழ் வேலைகளை உருவாக்கிய நிறுவனங்களில் 99 விழுக்காடு சிறிய, நடுத்தர நிறுவனங்கள் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்தார். ஏறக்குறைய பாதி நிறுவனங்கள் ஒன்று அல்லது இரண்டு உள்ளூர் ஊழியர்களை வேலையில் அமர்த்தின. மற்ற நிறுவனங்கள் இரண்டு ஊழியர்களுக்கும் மேற்பட்டவர்களை வேலைகளில் சேர்த்தன.
டாக்டர் டான், ஜூரோங் பறவைப் பூங்காவில் அமைந்திருக்கும் 'சோஷியல் கிச்சன்' உணவகத்திற்குச் சென்றிருந்தார். அதற்கு பிறகு அவர் மெய்நிகர் ரீதியில் செய்தியாளர்களிடம் பேசினார்.
வேலை தொடர்பான ஆகப் புதிய புள்ளிவிவரங்கள் நம்பிக்கை ஊட்டுவதாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் மறுஉறுதி அளிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
புதிய வேலைகளில் பெரும்பாலானவை மொத்த வர்த்தகம், நிபுணத்துவச் சேவைகள், தகவல் தொடர்பு ஆகியவை போன்ற வளரும் துறைகளில் உருவாக்கப்பட்டன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். புதிய வேலைகளில் 20% வேலைகள், உணவு சேவை, சில்லறை வர்த்தகத் துறைகளைச் சேர்ந்தவையாக இருந்தன.
அரசாங்க ஆதரவைப் பயன்படுத்திக்கொண்டு ஊழியர்களின் தேர்ச்சிகளைப் புதுப்பித்து மேம்படுத்தும்படி முதலாளிகளை அமைச்சர் வலியுறுத்தினார். மாறிக்கொண்டே இருக்கின்ற சூழலில் ஒரு வேலைக்கு நூற்றுக்குநூறு பொருத்தமான ஊழியரைக் காண்பது என்பது சிரமமானதாக இருக்கக்கூடும் என்பதை டாக்டர் டான் சுட்டினார். இருந்தாலும் திறந்த மனதுடன் நல்ல ஊழியர்களை அமர்த்தி அவர்களுக்கு முதலாளிகள் பயிற்சி அளிக்க முடியும் என்று தான் நினைப்பதாக அவர் குறிப்பிட்டார்.

