அடுத்த மூன்று மாத 'சிஓஇ' எண்ணிக்கை 6.7% குறைவு
அடுத்த மூன்று மாதங்களில் ஏலக்குத்தகையில் விடப்படும் வாகன உரிமைச் சான்றிதழ்களின் (சிஓஇ) எண்ணிக்கை 6.7% குறையவுள்ளது. இதன்படி ஆகஸ்ட் தொடங்கி அக்டோபர் வரை, ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 3,540 'சிஓஇ'கள் ஏலக் குத்தகைக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய ஒதுக்கீட்டு எண்ணிக்கையான 3,752ஐக் காட்டிலும் சற்று குறைவே. வர்த்தக வாகனங்களை வாங்குவதிலும் விற்பதிலும் இந்தச் சரிவு சற்று கூடுதலாக 26.8 விழுக்காடாக இருக்கும். தற்போதைய 314 'சிஓஇ' ஒதுக்கீடு, அடுத்த மாதம் முதல் சராசரியாக 230ஆகக் குறையலாம். இவ்வாறு எண்ணிக்கையைக் குறைப்பது எதிர்பார்த்ததே என்று மோட்டார் வாகன விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐந்து நாடுகளின் தற்காப்பு உறவை மறுஉறுதி செய்த திட்டம்
சிங்கப்பூர் ஆயுதப் படை வெற்றிகரமாக 30வது 'எக்சர்சைஸ் சுமன் வாரியர்' திட்டத்தைச் செயல்படுத்தி உள்ளது. இது ஐந்து நாடுகளின் தற்காப்பு ஒப்பந்தத்தின் கீழ் முதல் முறையாக இவ்வாண்டு மெய்நிகராக நடைபெற்றது. சிங்கப்பூருடன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 132 பிரதிநிதிகள் இதில் பங்கேற்றதாக தற்காப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது. கொவிட்-19 சூழலுக்கிடையே இந்தப் பயிற்சியை மேற்கொண்டதன் மூலம் ஐந்து நாடுகள் கொண்டுள்ள வலுவான கடப்பாடு தெரிவதாக சிங்கப்பூரின் இரண்டாவது காலாட் படைப் பிரிவு தளபதி கர்னல் முகம்மது ஃபிரோஸ் (படம்) தெரிவித்தார். பிறரிடமிருந்து கற்றுக்கொள்ளவும் உறுப்பு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கிடையே செயல்பாட்டு ஆற்றலை மேம்படுத்தவும் திட்டம் உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மியன்மார் பயணிகளுக்கு இன்றுமுதல் தடை
மியன்மாரிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு இன்றுமுதல் அனுமதி மறுக்கப்படும் என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. மியன்மாரில் பதிவாகி வரும் கொவிட்-19 சம்பவங்கள் அதிகரித்துள்ளதைக் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நீண்டகால வருகை அட்டை, குறுகியகால வருகை அட்டை ஆகியவற்றை வைத்திருப்பவர்கள் கடந்த 21 நாட்களில் மியன்மாருக்குச் சென்றிருந்தால் அல்லது பயணத்தின் இடையே மியன்மாரில் இறங்கியிருந்தால் சிங்கப்பூருக்குள் அனுமதிக்கப்படமாட்டா.

