தெம்பனிஸ் ரோவர்ஸ் குழுவைச் சேர்ந்த காற்பந்து வீரர் ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
'ஆசிய சாம்பியன்ஸ் லீக்' போட்டி முடிவடைந்து உஸ்பெகிஸ்தானிலிருந்து காற்பந்துக் குழு திரும்பியதை அடுத்து அணியில் இடம்பெற்ற விளையாட்டாளருக்குக் கிருமித்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
பணிக்காகச் சென்றிருந்தபோது கொவிட்-19 தொற்று ஏற்பட்ட முதல் சிங்கப்பூர் விளையாட்டு வீரர் இவர் என்று நம்பப்படுகிறது.
இதற்கிடையே கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியை அந்தக் காற்பந்து விளையாட்டாளர் இன்னும் போட்டுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
விளையாட்டாளருக்குத் தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்று நேற்றிரவு நிலவரப்படி தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கூ டெக் புவாட் மருத்துவமனையில் அவர் கண்காணிக்கப்பட்டு வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.
சிங்கப்பூர் திரும்பும் வழியில் இடையே துபாயில் காற்பந்துக் குழு தரையிறங்கி ஒன்பது மணிநேரம் காத்திருந்ததாகக் கூறப்பட்டது.
இதற்கிடையே இப்பயணத்தை மேற்கொண்டிருந்த அனைவரும் கொவிட்-19 தொடர்பில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடித்ததாக தெம்பனிஸ் ரோவர்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
டாஷ்கென்ட்டில் இருந்தபோது ஒவ்வோர் ஆட்டத்திற்கு முன்னதாக கொவிட்-19 பரிசோதனையைச் செய்துகொண்டதாகவும் கூறப்பட்டது. அணியில் எஞ்சிய ஆட்டக்காரர்கள் தற்போது இரு வாரத் தனிமை உத்தரவில் வைக்கப்பட்டுள்ளனர்.

