ஒழுக்கக்கேடான நடத்தையின் சந்தேகத்தில் 20 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 20க்கும் 34க்கும் இடைப்பட்ட வயதினர் என்று போலிசார் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.
தற்போது உணவு, பானக் கடைகளாகச் செயல்படும் மூன்று கேடிவி மனமகிழ் கூடங்களில் பாலியல் ரீதியான நடவடிக்கைகளில் இந்தப் பெண்கள் ஈடுபட்டிருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் கொரிய, மலேசிய, தாய்லாந்து, வியட்னாம் நாட்டவர் என்றும் கூறப்பட்டது.
சௌத் பிரிட்ஜ் ரோடு, சிலிகி ரோடு, கேலாங் ரோடு ஆகிய பகுதிகளில் சட்டவிரோதச் செயல்களுக்கு எதிராக அதிகாரிகள் நேற்று முன்தினம் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையின்போது 20 பேரும் சிக்கினர்.
கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) (கட்டுப்பாட்டு ஆணை) விதிமுறைகள் 2020ன் கீழ் மூன்று கேடிவி கூட நிறுவனங்கள் மீது விசாரணையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூடங்களில் பெண்களைக் கொண்டு உபசரிப்புச் சேவை வழங்கியிருந்தது தொடர்பில் இவ்விசாரணை நடந்து வருகிறது.
ஒரு கேடிவி கூடத்தில் பகடை விளையாட்டும் அனுமதிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. கொவிட்-19 விதிமுறைகள்படி இதுவும் தடைசெய்யப்பட்ட ஒரு நடவடிக்கையாகும். பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளை இவ்வாறு மீறிய நிறுவனங்களின் உணவு உரிமத்தை சிங்கப்பூர் உணவு அமைப்பு ரத்து செய்யலாம்.
சட்டவிரோதச் செயல்களுக்கு எதிராக மனமகிழ்க் கூடங்களில் போலிசார் தங்களின் சோதனை நடவடிக்கைகளை அதிகப்படுத்த உள்ளதாகக் கூறப்பட்டது.

