2வது காலாண்டில் 14.3% வளர்ச்சி; ஆண்டு வளர்ச்சி 4%-6% வரை

2வது காலாண்டில் 14.3% வளர்ச்சி; ஆண்டு வளர்ச்சி 4%-6% வரை

2 mins read
312c2c59-8e38-4ee8-8f44-d79c72905e29
-

சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் சென்ற ஆண்­டின் இரண்­டா­வது காலாண்டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்த ஆண்டு ஏப்­ரல் முதல் ஜூன் வரைப்­பட்ட மூன்று மாதங்­களில் 14.3 விழுக்­காடு வளர்ச்சி கண்டிருக்­கிறது.

வர்த்­தக தொழில் அமைச்சு நேற்று இதனை தெரி­வித்­தது. கொவிட்-19 கார­ண­மாக சென்ற ஆண்டு ஏப்­ரல் 7ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை பொரு­ளி­யல் முடக்­கம் நடப்­பில் இருந்­தது. அத­னால் அந்­தக் கால­கட்­டத்­தில் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி 13.3 விழுக்­காடு சரிந்­தது.

அத­னு­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்த ஆண்டு இரண்­டா­வது காலாண்டின் வளர்ச்சி ஒரு சாதனை அளவாக இருக்­கிறது என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

இருந்­தா­லும் சரி­யாக்­கங்­களை அடுத்து காலாண்டு அடிப்­ப­டை­யில் சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் இந்த ஆண்­டின் 2வது காலாண்­டில் 2 விழுக்­காடு சுருங்கி இருக்­கிறது. அது இந்த ஆண்டு முதல் காலாண்­டில் 3.1% வளர்ந்­தி­ருந்­தது.

துல்­லி­ய­மான கணக்­கீடு­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு பார்க்­கை­யில், 2019 இரண்டாவது காலாண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்த ஆண்­டின் இரண்­டா­வது காலாண்டு வளர்ச்சி 0.9 விழுக்­காடு குறை­வா­கவே இருக்­கிறது.

கொவிட்-19 கார­ண­மாக பல கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருந்து வந்­தா­லும் சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் தொடர்ந்து முன்­னேற்­றப் பாதை­யில் மேம்­பட்­டுச் செல்­வ­தாக பொரு­ளி­யல் வல்­லு­நர்­கள் கூறு­கி­றார்­கள்.

இரண்­டா­வது காலாண்­டின் வளர்ச்சி புளூம்­பர்க் நிறு­வ­னம் நடத்திய ஆய்­வில் வல்­லு­நர்­கள் முன்­னு­ரைத்து இருந்த அள­வை­விட கொஞ்­சம் குறை­வா­கவே இருக்­கிறது.

இந்­நி­லை­யில், சென்ற ஆண்டு நவம்­ப­ரில் கூறியபடியே இந்த ஆண்டுக்­கான வளர்ச்சி 4% முதல் 6% வரை இருக்­கும் என்று அமைச்சு நேற்று மீண்­டும் வலி­யு­றுத்திக் கூறி­யது.

சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் சென்ற மாதம் ஓர் ஆய்வு முடிவை வெளி­யிட்­டது.

தடுப்­பூசி இயக்­கம் வேகம் அடை­வ­தன் கார­ண­மாக இந்த ஆண்­டில் பொரு­ளி­யல் வளர்ச்சி 6.5% வரை இருக்­கும் என்று தனி­யார் துறை வல்­லு­நர்­கள் முன்­னு­ரைத்து இருப்­ப­தாக அந்த ஆய்வு தெரி­வித்­தது.

சென்ற ஆண்டு 2வது காலாண்டில் பொருளியல் குறிப்பிடத்தக்க அளவுக்குச் சுருங்கி இருந்தது. இதுவே இந்த ஆண்டு காலாண்டில் வலுவான வளர்ச்சிக்குப் பெரிதும் காரணம். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம்