இனவாதச் செயல்கள் நிகழும்போது, அவற்றைத் தவறு என்று சுட்டிக்காட்டி எதிர்கொள்வது முக்கியம். எனினும் உரையாடலைத் தொடரும் வகையில் அத்தகைய எதிர்கொள்தல் ஆக்ககரமாக இருக்கவேண்டும் என்று கலாசார, சமூக, இளையர்த்துறை அமைச்சர் திரு எட்வின் டோங் கூறினார்.
நேற்றைய கருத்தரங்கில் பேசிய அவர், அண்மையில் இனவாதக் கருத்துகளை எதிர்த்த ஐஸ் கிரீம் கடை உரிமையாளர் திரு டேவ் பிரகாஷை எடுத்துக்காட்டாகச் சுட்டினார்.
திரு பிரகாஷ் தமது சீனக் காதலியுடன் இருந்ததைப் பார்த்து பலதுறைத் தொழில்கல்லூரி விரிவுரையாளர் டான் பூன் லீ இனவாதத் கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அந்தச் சம்பவத்தைக் காணொளியாகப் பதிவுசெய்த திரு பிரகாஷ், அது தம் மனதைப் புண்படுத்தியதாகக் கூறியிந்தார்.
திரு பிரகாஷ் அச்சூழ்நிலையை மரியாதையாகவும் நிதானமாகவும் கையாண்டார் என்றும் மற்றவர்கள் அது பற்றி உரையாட களத்தை ஏற்படுத்தித் தந்தார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பழிவாங்கும் நோக்கம் இல்லாமல் அப்பிரச்சினை பற்றி சிங்கப்பூரில் உரையாடல் தேவை என்று நினைத்து திரு பிரகாஷ் செயல்பட்டதை திரு டோங் சுட்டிக்காட்டினார்.

