போலிப் பயிற்சி நிறுவனங்களை உருவாக்கி மானியம் பெற்று, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தில் மோசடி செய்த கும்பலில் முக்கிய நபர் ஒருவர் தமது பங்கை ஒப்புக்கொண்டார்.
ஆன்டி குவெக் சூ லெங், 41 போலி பயிற்சி நிறுவனங்களில் இயக்குநராகக் காட்டப்பட்டார்.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட பயிற்சிகளுக்கான கட்டணத்தில் ஒரு பங்கை ஊழியரை அனுப்பும் நிறுவனமோ பயிற்சியை வழங்கும் நிறுவனமோ கட்டணச் சலுகையாக அரசாங்கத்திடமிருந்து பெற முடியும். சலுகைப் பணம் யாருக்கு வழங்கப்படுகிறது என்பது விண்ணப்ப முறையைப் பொறுத்தது.
குவெக்கும் அவருடன் நான்கு கூட்டாளிகளும் சேர்ந்து ஒன்பது போலிப் பயிற்சி நிறுவனங்களை உருவாக்கினர். அவற்றின் வழி 2017ஆம் ஆண்டு மே முதல் அக்டோபர் வரை பயிற்சிக் கட்டண மானியத்துக்கு 8386 விண்ணப்பங்களும் தொகையைப் பெற 8391 கோரிக்கைகளையும் அவர்கள் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் அமைப்பிடம் சமர்ப்பித்தனர்.
அது, சிங்கப்பூரில் அரசாங்க அமைப்பு ஆகப் பெரிய அளவில் மோசடி செய்யப்பட்ட சம்பவமாக கருதப்படுகிறது.
தமது குற்றச்செயலுக்கான தரகுத் தொகையாக குவெக் $1 மில்லியனுக்கு மேல் பெற்றார்.
காணொளி மூலம் நடந்த நீதிமன்ற விசாரணையில் மோசடி, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுதல், உள்ளிட்ட 21 குற்றங்களை குவெக் ஒப்புக்கொண்டார். ஆகஸ்ட் 18ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்போது மேலும் 49 குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும். மற்றவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை பின்னர் நடைபெறும்.

