சீனாவின் சினோவேக் கொவிட்-19 தடுப்பூசி குறித்து கூடுதல் தரவுகள் வந்துள்ளதை அடுத்து, சுகாதார அறிவியல் ஆணையம் அவற்றை மதிப்பிட்டு வருகிறது.
இம்மாதம் 5ஆம் தேதி முழுமையான மதிப்பீட்டிற்குத் தேவையான குறைந்தபட்ச முக்கியத் தரவுகளை சினோவேக்கிடம் இருந்து பெற்றதாகவும் அத்தரவுகள் குறித்த மதிப்பீடு முடிந்தபின் மேலதிக தகவல் வெளியிடப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
"கூடுதல் தரவுகள் தொடர்பில் கவனமான, முழுமையான மறுஆய்வை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. 4-6 வாரங்களுக்குள் அதனை நிறைவுசெய்ய இலக்கு கொண்டுள்ளோம். அதிகாரபூர்வ முடிவு எடுக்கப்பட்டபின் அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும்," என்று ஆணையம் கூறியிருக்கிறது.
சிங்கப்பூரின் தேசிய தடுப்பூசித் திட்டத்தில் சினோவேக் தடுப்பூசி சேர்க்கப்படவில்லை. அத்தடுப்பூசியின் செயல்திறன் குறித்து மாறுபட்ட கருத்துகளை அனைத்துலக ஆய்வுகள் வெளியிட்டுள்ளன.
அத்தடுப்பூசி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மிக முழுமையான பகுப்பாய்வு, கொவிட்-19 கிருமிக்கு எதிராக அது 51% செயல்திறனைக் கொண்டுள்ளதாகக் காட்டுகிறது.
மாறாக, தேசிய தடுப்பூசித் திட்டத்தில் இடம்பெற்றுள்ள மொடர்னா, ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகள் கிட்டத்தட்ட 90% செயல்திறனைக் கொண்டுள்ளன.
இருப்பினும், சிறப்பு அனுமதியின்கீழ் சினோவேக் தடுப்பூசி சிங்கப்பூரில் போடப்பட்டுவரும் நிலையில், இம்மாதம் 3ஆம் தேதிவரை, 17,296 பேர் அதன் முதல் தவணையைப் போட்டுக்கொண்டனர்.

