தேசிய தினத்துக்கான ரெட் லயன்ஸ் வான்குடை சாகசக் குழு இன்று (ஜூலை 15) பயிற்சியில் ஈடுபட்டது.
பயிற்சியின்போது எதிர்பாராத விதமாக வான்குடை வீரர் ஒருவர் காயமடைந்தார்.
பீஷான் வட்டாரத்தில் உள்ள ஜங்ஷன் 8 கடைத்தொகுதிக்கு அருகில் இருக்கும் திடலில் அவர் தரையிறங்கியபோது அவர் மீது கட்டப்பட்டிருந்த கொடி ஒன்று புல்தரையில் சிக்கிக்கொண்டது.
இதனால் அவர் அந்தப் புல்தரையில் விழுந்து காயமுற்றார். அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் உடனடியாக அவரை நோக்கி விரைந்தனர்.
அவரது கழுத்தில் கட்டுபோட்டு தூக்குப் படுக்கையில் அவரை வைத்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இந்த விபத்து இன்று பிற்பகல் 2 மணி அளவில் நிகழ்ந்தது. வான்குடை வீரர்கள் இரண்டாம் சுற்று சாகசப் பயிற்சியில் ஈடுபட்டபோது விபத்து நிகழ்ந்தது.
அதற்கு முன்பு காலை 9 மணி அளவில் பயிற்சியில் ஈடுபட்ட ஐந்து வீரர்களும் வெற்றிகரமாக தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டது.
தேசிய தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நாட்டில் பல்வேறு இடங்களில் அடுத்த மாதம் 7ஆம், 8ஆம் தேதிகளில் ரெட் லயன்ஸ் வான்குடை வீரர்கள் வான்குடை சாகசங்களில் ஈடுபட இருக்கின்றனர். ரெட் லயன்ஸ் வீரர்கள் தரையிறங்கும் இடங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தரையிறங்குவதற்கு ஏற்ற இடங்களை மதிப்பிட வான்குடை சாகசப் பயிற்சிகள் நடத்தப்படும் என்று சிங்கப்பூர் ஆயுதப் படை நேற்று தெரிவித்தது.
வான்குடை வீரர்கள் தரையிறங்குவதைப் பார்த்து பதற்றம் அடைய வேண்டாம் எனப் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பாதுகாப்பை முன்னிட்டு வான்குடை சாகச வீரர்கள் தரையிறங்குவதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
வான்குடை சாகசப் பயிற்சியின்போது ரெட் லயன்ஸ் வீரருக்கு விபத்து ஏற்பட்டிருப்பது இது முதல்முறையல்ல.
2017ஆம் ஆண்டில் எஃப்1 பந்தயத் தடத்தில் தரையிறங்கியபோது விழுந்து வீரர் ஒருவர் காயமடைந்தார்.
வானில் இருந்தபோது இன்னொரு வீரரின் வான்குடையுடன் அவரது வான்குடை சிக்கிக்கொண்டதால் அந்த விபத்து நிகழ்ந்தது.

