கேடிவி மனமகிழ் மன்றத்திற்குச் சென்றுவந்த உணவுக்கடை உதவியாளர்க்குத் தொற்று
புளோக் 75 லோரோங் 5 தோ பாயோவில் அமைந்துள்ள உணவங்காடி நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, நேற்றுக் காலையில் முழுவதுமாகத் தூய்மைப்படுத்தும் பணிகள் இடம்பெற்றன.
சென்ற வார இறுதியில் கேடிவி மனமகிழ் மன்றத்திற்குச் சென்று வந்ததாகச் சந்தேகிக்கப்படும் உணவுக்கடை உதவியாளர் ஒருவர்க்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை இடம்பெற்றது.
அறுவர் அடங்கிய குழுவினர் தனிநபர் பாதுகாப்பு அங்கி அணிந்தபடி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அங்கு கிருமிநாசினி தெளிப்பிலும் மேசை, இருக்கைகளைத் துடைக்கும் பணிகளிலும் ஈடுபட்டனர்.
என்டியுசி ஃபுட்ஃபேர் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் அந்த உணவங்காடி நிலையத்தில் 36 கடைகள் உள்ளன.
கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது குறித்து நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் தகவல் கிடைத்ததாக உணவுக்கடைக்காரர்கள் கூறினர்.
பொருள்களையும் பாத்திரங்களையும் மூட்டை கட்ட மூன்று மணி நேர காலக்கெடு தரப்பட்டதாகவும் தங்களை 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக எச்சில்/சளி மாதிரிப் பரிசோதனையாளர் நேற்றுக் காலையில் உணவுக்கடைக்காரர்கள் சிலரது வீடுகளுக்கு நேரில் சென்றனர்.
"திடீரென அறிவிப்பு வெளியானதால் மொத்த உணவங்காடி நிலையமும் களேபரமாகிவிட்டது. எல்லாரும் பதற்றத்துடன் மூட்டை கட்டினர்," என்றார் அந்த உணவங்காடி நிலையச் சங்கத்தின் தலைவர் டான் பூன் சுவான், 50.
இதனிடையே, நேற்று மாலை 5.30 மணியளவில் சீன உணவை வாங்கிச் செல்வதற்காக அந்த உணவங்காடி நிலையத்திற்கு வந்தார் தோ பாயோ லோரோங் 4 புளோக் 58ல் வசித்துவரும் திரு சேகர் கோபால்சாமி, 59. அங்கு வந்த பிறகே அந்நிலையம் மூடப்பட்ட விவரம் அவருக்குத் தெரியவந்தது.
ஆயினும், இரு வாரங்களுக்கு ஒருமுறையே அங்கு உணவு வாங்க வருவதால் தமக்கு அதிகம் பாதிப்பு இருக்காது என்றார் அவர்.
அக்கம்பக்கத்தில் வசிக்கும் முதியவர்களில் அதிகமானோர் அந்த உணவங்காடி நிலையத்திற்கு அடிக்கடி செல்வர் என்பதால் அதனைத் தற்காலிகமாக மூடியது வரவேற்கத்தக்கது என்றார் தோ பாயோ லோரோங் 5ல் வசித்துவரும் திருமதி ஜமீலா அப்துல்லா, 63.
முன்னர் நண்பர்களுடன் சேர்ந்து அந்த உணவங்காடி நிலையத்தில் பானம் அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் திரு த.இளங்கோவன், 62.
ஆனால், கொவிட்-19 கிருமித்தொற்று தீவிரமானதிலிருந்து, அது குடும்பத்தினரைப் பாதித்துவிடக்கூடாது என்ற அக்கறையில், இப்போது அங்கு செல்வதைக் குறைத்துக்கொண்டு, பெரும்பாலும் வீட்டிலேயே இருப்பதாக அவர் சொன்னார்.
லோரோங் 5 புளோக் 48 குடியிருப்பாளர்களில் ஒருவரான இல்லத்தரசி திருமதி கோமதி ராமலட்சுமி, 49, தாம் பெரும்பாலும் வீட்டில் சமைப்பதால் உணவங்காடி நிலையத்திற்குப் போவதற்கான தேவை இல்லை என்றார்.
அத்துடன், தோ பாயோ வட்டாரத்தைச் சுற்றி பல உணவங்காடி நிலையங்கள் இருப்பதால் அந்த நிலையத்தைத் தற்காலிகமாக மூடியதால் குடியிருப்பாளர்களுக்குப் பெரிதாக பாதிப்பு இராது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கூடுதல் செய்தி:
ப.பாலசுப்பிரமணியம்

