வெளிநாட்டில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை உடையோர், சிங்கப்பூரில் தங்களது தடுப்பூசி ஆவணங்களில் அவ்விவரத்தைப் பதிவேற்றம் செய்யலாம்.
வெளிநாட்டில் மொடர்னா, ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகளில் ஒன்றை, அல்லது உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகாலப் பயன்பாட்டுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றைப் போட்டுக்கொண்டவர்கள், சிங்கப்பூர் திரும்பியதும் தேசிய தடுப்பூசிப் பதிவகத்தில் அவ்விவரத்தைப் பதிவேற்றலாம். அதற்கு, அவர்கள் வெளிநாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்று தேவை என்று சுகாதார அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
அத்துடன், அவர்கள் சிங்கப்பூரில் 'சிராலஜி' சோதனை செய்துகொண்டு, 'ஏற்கெனவே தொற்று கண்டதாக' அதன் முடிவு வரவேண்டும். அதன்மூலம், தனிநபர் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொண்டதை மேலும் உறுதிசெய்யலாம் என்று அமைச்சு கூறியுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரத்தை தங்களது தடுப்பூசி ஆவணங்களில் சேர்க்க விரும்புவோர், அதற்காக தனியார் சுகாதாரப் பராமரிப்பு சேவை வழங்குநரையும் நாடலாம்.
'சாட்டா', ராஃபிள்ஸ் மருத்துவக் குழுமம், 'மின்மெட்', 'மேக் ஹெல்த் கனெக்ட் (MHC)' உள்ளிட்டவை இப்போதைக்கு அச்சேவையை வழங்குகின்றன. அதற்கான கட்டணத்தை மருந்தகங்களே நிர்ணயிக்கும். அரசாங்கம் கட்டணக்கழிவு வழங்காது.

