ஒரே வீட்டைச் சேர்ந்த இரு குழந்தைகளுக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, சுவா சூ காங்கில் உள்ள ஒரு பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ் நிலையம் மூடப்பட்டது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் அண்மையில் நிலையத்தில் இருந்த குழந்தைகளும் பணியாளர்களும் நேற்று முன்தினம் புதன்கிழமையில் இருந்து இம்மாதம் 26ஆம் தேதிவரை ஈட்டப்படா விடுப்பில் (leave of absence) இருப்பர் என்று தலைமை நிர்வாக முதல்வர் ஜனிகா இங், குழந்தைகளின் பெற்றோர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
கீட் ஹோங் குளோஸ், புளோக் 801ல் அமைந்துள்ள 'பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ் அட் பிரிக்லேண்ட்' என்ற அந்நிலையம், நேற்று முன்தினமும் நேற்றும் மூடப்பட்டது. அவ்விரு நாள்களிலும் அங்கு சுத்தப்படுத்தும் பணிகளும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. தொற்றுகளின் தடமறியும் பணி தொடர்கிறது.
அந்நிலையத்தின் பாலர்நிலை ஒன்றில் (கே1) பயிலும் ஒரு குழந்தைக்குத் தொற்று உறுதியானதாக நேற்று முன்தினம் மாலையில் சுகாதார அமைச்சு, அந்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தது. பின்னர் அந்நிலையத்தின் மழலையர் வகுப்பில் பயிலும் இன்னொரு குழந்தையையும் கொரோனா தொற்றியது மறுநாள் காலையில் உறுதிப்படுத்தப்பட்டது.
அவ்விரு குழந்தைகளும் கடைசியாக கடந்த திங்கட்கிழமையன்று அந்நிலையத்திற்குச் சென்றிருந்தனர்.
ரகசியத்தன்மை காரணமாக அவ்விரு குழந்தைகள் பற்றிய விவரங்கள் வெளியிடவில்லை. பணியாளர்கள், குழந்தைகள் அனைவரது பாதுகாப்பையும் உறுதிசெய்ய அந்நிலையம், உரிய அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அந்நிலையத்தில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்களைச் சுகாதார அமைச்சு தொடர்புகொள்ளக்கூடும் என்று திருவாட்டி இங் சொன்னார்.
இன்றுமுதல் அந்நிலையத்தில் கைக்குழந்தைப் பராமரிப்பு சேவை மீண்டும் தொடங்கவுள்ளது. மற்ற வகுப்புகள் இம்மாதம் 27ஆம் தேதியில் இருந்து தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கள் பிள்ளைகளின் உடல்நலத்தைக் கண்காணிக்கும்படியும் உடல்நலமில்லாமல் போனால் மருத்துவரை நாடும்படியும் பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக திருவாட்டி இங் கூறினார்.

