செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
f7c09268-632a-4796-b56c-99520d3e7940
-

அதிக பணிப்பெண்கள் சிங்கப்பூர் வர வழிவகுக்கும் முன்னோட்டத் திட்டம்

இம்மாதம் தொடங்கவுள்ள ஒரு முன்னோட்டத் திட்டத்தின்கீழ் விரைவில் அதிகமான வெளிநாட்டுப் பணிப்பெண்கள் சிங்கப்பூர் வர இயலும். இத்திட்டத்தின்கீழ், சிங்கப்பூரில் நுழையுமுன் பணிப்பெண்கள் தங்களது தாய்நாடுகளில் கூடுதல் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுக்கு உட்பட வேண்டும். அதாவது, தங்களது நாடுகளில் உள்ள பிரத்தியேக தனிமைப்படுத்தும் இடங்களில் 14 நாள்கள் தங்கியிருந்து, அவர்கள் பலமுறை கொவிட்-19 பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர் வேலைவாய்ப்பு முகவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. இங்கு வந்தபின் அவர்கள் 14 நாள்கள் வீட்டில் தங்கும் உத்தரவு, கொரோனா பரிசோதனை, பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் போன்ற நடைமுறைகளுக்கு உட்பட வேண்டும். முதற்கட்டமாக, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ் நாடுகளில் இருந்து வரும் பணிப்பெண்களை இத்திட்டம் உள்ளடக்கும்.இந்த முன்னோட்டத் திட்டத்தின்கீழ் பணிப்பெண்களை வேலைக்கு எடுக்கும் முதலாளிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். கிட்டத்தட்ட 70 வேலைவாய்ப்பு முகவைகள் இத்திட்டத்தில் பங்கெடுக்கின்றன.

கிருமித்தொற்று: கம்ஃபர்ட்டெல்குரோ ஓட்டுநர் பயிற்சி மையம் மூடப்பட்டது

உபியில் அமைந்துள்ள கம்ஃபர்ட்டெல்குரோ ஓட்டுநர் பயிற்சி மையமும் கோவன், தெம்பனிஸ் வட்டாரங்களில் இருக்கும் அதன் கிளை அலுவலகமும் சேவை முனைகளும் இம்மாதம் 29ஆம் தேதிவரை மூடப்பட்டிருக்கும். "எங்களது ஓட்டுநர் பயிற்சி மையத்திற்கும் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நால்வருக்கும் தொடர்பிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு எங்களது செயல்பாடுகளை நிறுத்தி வைக்க உத்தரவிடப் பட்டுள்ளது," என்று கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனத்தின் தலைமைத் தொடர்பு அதிகாரி டேமி டான் கூறினார். இன்று மாலை 4.25 மணியிலிருந்து 29ஆம் தேதிவரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள எழுத்து, செய்முறைத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் அதற்கான கட்டணங்கள் திருப்பித் தரப்படும் என்றும் ஃபேஸ்புக் வழியாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

தேசிய சேவையாளர்களுக்கு

இரண்டு வாரங்களுக்கு விலக்கு

அடிப்படை இராணுவப் பயிற்சியில் புதிதாகச் சேர்ந்தோரும் தயார்நிலை தேசிய சேவையாளர்களும் 'எம்ஆர்என்ஏ' முதல், இரண்டாம் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட பிறகு இரண்டு வாரங்களுக்குக் கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியிராது என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்து இருக்கிறது. இதுநாள்வரை தடுப்பூசி போட்டுக்கொண்டபின் குறைந்தது ஒரு வாரத்திற்கு அவர்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளப் பட்டனர். இந்நிலையில், கூடுதல் முன்னெச்சரிக்கையாக அந்தக் காலவரம்பு இரட்டிக்கப்பட்டுள்ளது.