மீண்டும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க கோன்கோர்ட் இன்டர்நேஷனல் மருத்துவ
மனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் செயல்பாட்டில் குறையாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதியன்று ஆடம் சாலையில் உள்ள அந்த மருத்துவ
மனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சை அறை போன்ற முக்கிய இடங்களில் உயிர் காக்கும் சாதனங்களும் நோயாளி
களுக்குத் தேவையான பொருட்களும் இல்லாதது அல்லது முறையாகப் பராமரிக்கப்படாதது வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து அந்த மருத்துவமனை அனைத்து சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளையும் நிறுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு உத்தரவிட்டது.
தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்கள் சட்டத்தின்கீழ் உள்ள தேவைகள் பூர்த்தி செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடந்த மாதம் 16ஆம் தேதியிலிருந்து மீண்டும் நோயாளி களுக்குச் சிகிச்சை அளிக்க கோன்கோர்ட் இன்டர்நேஷனல் மருத்துவமனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விதிமுறைக்கு உட்பட்டு செயல்படத் தவறும் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களுக்கு $20,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
அதுமட்டுமல்லாது, மருத்துவச் சேவை வழங்க தேவையான உரிமத்தையும் அவை இழக்கக்கூடும். தற்போது கோன்கோர்ட் இன்டர்நேஷனல் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ள உரிமம் இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுப்படி
யாகும்.

