பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆய்வு; முதலீடு செய்யும் சிங்கப்பூர்
சிங்கப்பூர் பூமலையில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பசுமைக் கண்காட்சியில் கலந்துகொண்ட அமைச்சர் கிரேஸ் ஃபூ (இடது). படம்: சாவ்பாவ்
பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எவ்வாறு மறுசுழற்சி செய்வது, அவற்றை முறையாக அகற்றுவது ஆகியவை தொடர்பாக சிங்கப்பூரில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
பிளாஸ்டிக் பொருட்களை இன்னும் சிறந்த வழிகளில் மறுசுழற்சி செய்ய முதலீடு செய்யப்படும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்துவிட முடியாது. பிளாஸ்டிக் மலிவானது மட்டுமல்லாது எடை அதிகம் இல்லாததும் நீர் புக முடியாததும் கூட. எனவே, சுகாதார அடிப்படையில் அவை பெரிதும் பயன்படுகின்றன.
உதாரணத்துக்கு, கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது தங்குவிடுதிகளில் வசித்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு பிளாஸ்டிக் பொட்டலங்களில் உணவு விநியோகிக்கப்பட்டதை அமைச்சர் ஃபூ சுட்டினார்.
சிங்கப்பூரில் மறுசுழற்சி விகிதம் அவ்வளவு அதிகம் இல்லை என்பதால் நிலப்பரப்புகளும் கடலும் மாசடையாமல் இருக்க பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் முறை மேம்படுத்தப்பட வேண்டும் என்றார் அமைச்சர் ஃபூ.
இதனை முன்னிட்டு, சிங்கப்பூரின் மறுசுழற்சித் திறனை மேம்படுத்துவது தொடர்பான ஆய்வை நடத்த அரசாங்கம் முதலீடு செய்யும் என்றார் அவர். அதே சமயத்தில் பொட்டலம் கட்டுவதில் குறைந்த அளவிலான பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும் என்று அமைச்சர் ஃபூ கூறினார்.
அண்மைய நாட்களில் அதிக அளவில் பெய்த மழை
அண்மைய நாட்களில் சிங்கப்பூரில் அதிக அளவில் மழை பெய்தது. கடந்த இரண்டு வாரங்களில் பதிவான மழையின் அளவு வழக்கமாக ஜூலை மாதத்தில் பெய்யும் மழையைவிட அதிகமானது.
கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி நிலவரப்படி இம்மாதம் மொத்தம் 183.22 மில்லிமீட்டர் மழை பதிவானது. கடந்த சில ஆண்டுகளாக ஜூலை மாதத்தில் சராசரியாக 146.6 மில்லிமீட்டர் மழை பதிவானது.
இந்தத் தகவலை தேசிய சுற்றுப்புற வாரியம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஆக அதிகமாக புக்கிட் பாஞ்சாங்கில் 114.2 மில்லிமீட்டர் மழை பதிவானது. கடந்த திங்கட்கிழமையன்று ஆக அதிகமாக உலு பாண்டானில் 100.2 மில்லிமீட்டர் மழை பதிவானது.
இந்த இரண்டு நாட்களிலும் கனமழை பெய்ததால் செவ்வாய்க்கிழமை காலையில் அட்மிரல்ட்டி வட்டாரத்தில் வெப்பநிலை 22.5 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது.
புதிய தனியார் வீடுகள் விற்பனை 2.6 விழுக்காடு சரிவு
புதிய தனியார் வீடுகளின் விற்பனை கடந்த மாதம் 2.6 விழுக்காடு சரிந்தது. சொத்து மேம்பாட்டாளர்களால் கூடுதல் தனியார் வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டும் இந்நிலை ஏற்பட்டது. கொவிட்-19 கட்டுப்பாட்டுகள் காரணமாக புதிய வீடுகளை நேரில் சென்று பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த மே மாதத்தில் 895 புதிய தனியார் வீடுகள் விற்கப்பட்டன. இந்த எண்ணிக்கை கடந்த மாதம் 872ஆக குறைந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், விற்பனை 12.6 விழுக்காடு வீழ்ச்சி கண்டது.

