ஒற்றைப்பெற்றோராக இருந்து தங்கள் பிள்ளைகளையும் பெற்றோரையும் கவனித்துக்கொள்ள முடியாமல் தவிக்கும் பெண்களுக்கு உதவிவரும் 'டாட்டர்ஸ் ஆப் டுமோரோ' என்னும் தொண்டூழிய அமைப்புக்கு அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று வருகை மேற்கொண்டார். அப்போது அங்கு அந்த அமைப்பின் பங்காளிகள் மற்றும் அமைப்பால் பயனடைவோர் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அப்போது, குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு உதவும் வகையிலான திட்டங்கள் பற்றி அதிபர் கேட்டறிந்துகொண்டார்.
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஓர் ஆதரவுச் சூழலை நாம் தொடர்ந்து உருவாக்கி அதன்மூலம் அவர்களுக்கு வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பை வழங்குவது முக்கியம். வேலை தேடுவதும் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான பயிற்சியில் சேர்வதும் இவர்கள் எல்லாருக்கும் எளிதான ஒன்றல்ல. அவர்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்பதற்கான முயற்சிகள் எடுக்கவில்லை என்று கூறமுடியாது. எனவே, அவர்களும் மற்றவர்களைப் போல் நிரந்தரமான வேலை, நல்ல சம்பளம் பெறுவதற்கு வாய்ப்புகளை அவர்களுக்கு ஏற்படுத்தித் தருவது மிகமுக்கியம். அப்போதுதான் அவர்களது குழந்தைகளும் வறுமையால் பாதிக்கப்படமாட்டார்கள். இதுபோன்ற தாய்மார்களுக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் எதிர்காலத்தைச் சிறக்க வைக்கலாம் என்றும் அவர் கூறினார்.
வறுமையில் வாடும் பெண்களின் சூழ்நிலையை அறிந்து அவர்களின் மேம்பாட்டுக்குத் தேவையான வாய்ப்புகளை வழங்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.

