கொவிட்-19 கட்டுப்பாடுகளை மீறி சட்டவிரோதமாக பத்துப் பேரை ஒரே மேசையில் உட்கார அனுமதித்து அவர்களுக்குச் சட்டவிரோதமாக மது பரிமாறியதற்காக உணவக உரிமையாளர் ஒருவருக்கு $,9000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் அதிகாலை வேளையில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த உணவகத்தில் உள்ள இன்னொரு மேசையில் ஆறு பேர் ஒன்றாக அமர்ந்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.
தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக போடப்பட்ட கட்டுப்பாடுகளை மீறும் வகையில் நடந்த அந்த உணவகம், சட்டவிரோதமாக அதிகமானோர் ஒரே மேஜையில் உட்கார்ந்து அனுமதித்தபோது அந்த உணவகத்தின் முன்கதவு அடைக்கப்பட்டிருந்ததாக விசாரணையில் கூறப்பட்டது.
அந்தக் காலக்கட்டத்தில் கொவிட்-19ஐ கட்டுப்படுத்தும் வகையில் ஐந்து பேர் மட்டுமே ஒன்றாக அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
சிம்ஸ் அவென்யூவில் உள்ள அந்த உணவகத்தின் உரிமையாளர் 39 வயது சுன் வென்கியன். சீன நாட்டைச் சேர்ந்த சுன், ஒரு சிங்கப்பூர் நிரந்தரவாசியாவார்.
2020 செப்டம்பர் 19ஆம் தேதியன்று, இரவு 11.45 மணிக்கு, அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர், 'மாலா ஜியாங் ஹு' உணவகத்திற்குள் ஏராளமானோர் கூடியுள்ளதாக ஒரு போலிசுக்குத் தகவல் கொடுத்தார்.
போலிஸ் அதிகாரிகள் மூன்று பேர் சம்பவ இடத்திற்கு அதிகாலை 2.15 மணிக்குச் சென்றனர். அப்போது அந்த உணவகத்தின் கதவு மூடப்பட்டிருந்தது.
உணவகத்தின் உள்ளே நுழைந்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த உணவகத்தில் உள்ள இரண்டு அரைகளில் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுக்கொண்டும் மது அருந்திக்கொண்டும் இருந்தனர்.
முதல் அறையில் குறைந்தது ஒரு மேசையில் ஆறு பேர் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். இரண்டாவது அறையில் ஒரு மேசையில் 10 பேர் அமர்ந்து சாப்பிட்டும் மது அருந்திக் கொண்டும் இருந்தனர்.
அந்த உணவகத்தில் மது பரிமாறுவதற்கு உரிமம் இல்லாதபோதும் உணவக உரிமையாளர் சுன், தன் ஊழியர்களிடம், வாடிக்கையாளர்களுக்கு மது பரிமாற அறிவுறுத்தியிருந்ததை விசாரணையில் ஒத்துக்கொண்டார்.

