செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
7d314e56-039b-45b5-988a-926fb31c10d2
-

'துறைமுக செயல்பாடுகள் கலங்கரை

விளக்கத்தை பாதிக்காது'

துவாஸ் துறைமுகத்தின் செயல்பாடுகள் ஒருபோதும், அங்கிருக்கும் 126 ஆண்டுகள் பழமையான சுல்தான் ஷோல் கலங்கரை விளக்கத்தைப் பாதிக்காது என்று சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் நேற்று உறுதியளித்தது.

துவாஸில் துறைமுகத்திற்கான இரண்டாம் கட்ட மேம்பாட்டுப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் கடலில் இருந்து நிலம் மீட்கப்படும் பணியும் அடங்கும். கடந்த 2019ஆம் ஆண்டில் தொடங்கிய அந்தப் பணி 2027ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்பகுதியில் இருக்கும் பழமையான கலங்கரை விளக்கம் சிங்கப்பூர் கடல்சார் மரபுடைமையின் முக்கியமான கூறு என்று சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

துறைமுகத்தின் இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்து துறைமுகம் செயல்படத்தொடங்கும்போது, அந்தக் கலங்கரை விளக்கக் கட்டடம் அங்கிருந்து அகற்றப்படமாட்டாது என்று அந்தப் பேச்சாளர் கூறினார். 1895ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கலங்கரை விளக்கம் வரவிருக்கும் துவாஸ் துறைமுகத்திற்கும் ஜூரோங் தீவுக்கும் நடுவில் உள்ளது.

அங் மோ கியோவில் ஆடவர் மரணம்; மாது கைது

அங் மோ கியோ அவென்யூ 3ல் ஒரு வீட்டிற்கு வெளியே நேற்று தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து 51 வயது ஆடவர் ஒருவர் கொல்லப்பட்டார். அவரைக் கொலை செய்ததாக 39 வயது மாது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவ்விருவரும்முன்பின் அறிமுகமானவர்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலிஸ் கூறியது. சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வந்தபோது, அந்த ஆடவர், மாது இருவரிடமும் வெட்டுக்காயங்கள் கண்டறியப்பட்டன. அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், காயங்கள் காரணமாக அந்த ஆடவர் இறந்துவிட்டார். சிகிச்சைக்காக அந்த மாது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் இன்று அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று போலிஸ் தெரிவித்தது.

குற்றச்சாட்டு நிரூப்பிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

கரிம ஹைட்ரஜனை குறைக்க

நியூசிலாந்துடன் சிங்கப்பூர் கைகோத்தது

கரிம ஹைட்ரஜன் குறைக்கும் நடவடிக்கையை ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கான ஏற்பாடு ஒன்றில் சிங்கப்பூரும் நியூசிலாந்தும் கையெழுத்திட்டுள்ளன.

வர்த்தகம் தொழில் இரண்டாம் அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் மற்றும் நியூசிலாந்தின் எரிசக்தி மற்றும் வளங்கள் துறை அமைச்சர் மேகன் வூட்ஸ் ஆகியோர் ஒரு மெய்நிகர் விழாவில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஏற்பாட்டின் மூலம் கரிம ஹைட்ரஜன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் சிங்கப்பூருடன் நியூசிலாந்து அணுக்கமாகச் செயல்படும். இதன் மூலம் விளக்கப்படத் தரங்கள் மற்றும் சான்றிதழ்களுக்கான வாய்ப்புகள் எளிதாக்கப்படும். இந்த ஏற்பாடு, இரு நாடுகளும் ஒன்றிணைந்து கரிம ஹைட்ரஜனைக் குறைப்பது குறித்த ஆய்வில் ஈடுபட வழிவகுக்கிறது. அத்துடன் கரியமில வாயுவைக் குறைப்பதற்கான அனைத்துலக கட்டமைப்பை உருவாக்க சிங்கப்பூருக்கு இந்த ஏற்பாடு உதவும் என்று கூறப்படுகிறது.