மின்தூக்கி பழுதுபார்ப்பு ஊழியர்களுடன் அடுத்த ஆண்டிலிருந்து உள்ளூர் மின்படிக்கட்டு பழுதுபார்ப்பு ஊழியர்களும் படிப்படியான சம்பள உயர்வு முறையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். மின்படிக்கட்டு பழுதுபார்ப்பு ஊழியர்களும் படிப்படியான சம்பள உயர்வு முறையில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று முத்தரப்புக் குழு சமர்ப்பித்த பரிந்துரையை அரசாங்கம் நேற்று ஏற்றுக்கொண்டதை அடுத்து, இந்த இரு பிரிவு ஊழியர்களுக்கும் 2023 ஜனவரியிலிருந்து குறைந்தது ஒரு மாதச் சம்பள அளவில் வருடாந்திர போனஸ் வழங்கப்படும்.
என்டியுசியின் உதவித் தலைமைச் செயலாளர் திரு ஸைனல் சப்பாரியின் தலைமையிலான இந்த முத்தரப்புக் குழு, மின்தூக்கி பழுதுபார்ப்பு ஊழியர்களுக்கும் மின்படிக்கட்டு பழுதுபார்ப்பு ஊழியர்களுக்கும் 2023 முதல் 2028ஆம் ஆண்டு வரை வருடாந்திர குறைந்தபட்ச சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்திடம் பரிந்துரைத்தது.
இதன் மூலம் அந்த மிகக் குறைவான அளவில் உள்ள மின்தூக்கி பழுதுபார்ப்பு ஊழியருக்கும் மின்படிக்கட்டு பழுதுபார்ப்பு ஊழியருக்கும் 2023ல் மாதம் குறைந்தது $2,075 கிடைக்கும். அதற்கு முந்தைய ஆண்டில் அவர்களுக்குக் கிடைத்த சம்பளத்திலிருந்து அது 12% அதாவது $225 அதிகம்.
அடிப்படை சம்பளத்துடன் மிகுதிநேரம் மற்றும் இதர சம்பளக் கூறுகளையும் சேர்த்தால் அவர்கள் மாதம் $2,700 சம்பளம் பெறுவார்கள்.
இந்த மாற்றங்களால் இந்தத் தொழில்துறையில் உள்ள சுமார் 1,300 சிங்கப்பூரர்களாகவும் நிரந்தரவாசிகளாகவும் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் பலனடைவார்கள். அவர்களில் 44 விழுக்காட்டினர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். தற்போது இந்தத் தொழில்துறையில் 3,050 தொழில்நுட்பர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களில் 1,750 பேர் வெளிநாட்டு ஊழியர்கள்.
இந்த ஊழியர்கள் சிங்கப்பூரில் உள்ள கிட்டத்தட்ட 70,000 மின்தூக்கிகளையும் 7,000 மின்படிக்கட்டுகளையும் பழுதுபார்க்கிறார்கள்.
மின்தூக்கி பழுதுபார்ப்பு ஊழியர்களுக்கான படிப்படியான சம்பள உயர்வு முறை 2018ல் தன்னார்வ அடிப்படையில் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டது. அந்த முறை 2022ல் கட்டாயமாக்கப்படவுள்ளது.
இன்று ஜூரோங் ஈஸ்டில் உள்ள ஜேடிசி சம்மிட் கட்டடத்துக்கு, என்டியுசியின் தலைமைச் செயலாளர் திரு இங் சீ மெங்குடன் வருகை புரிந்த மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, "படிப்படியான சம்பள உயர்வு முறை, பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவற்றின் பட்டதாரிகள் இந்தத் தொழில்துறையில் சேர ஊக்குவிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்.
"அடுத்த சில ஆண்டுகளில், இந்தத் தொழில்துறையின் அடிப்படை சம்பள முறையில் குறிப்பிடத்தக்க உயர்வை நீங்கள் காணலாம்," என்று கூறினார்.

