சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி உள்ளூரில் 53 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்களில் 32 பேர் கேடிவி கிருமித்தொற்று குழுமத்துடன் தொடர்புடையவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், நேற்று அறிவிக்கப்பட்ட 53 பேரில் 24 பேர் ஏற்கெனவே நோய் தொற்றியவர்களுடனும் தனிமையில் இருந்தவர்களுடனும் தொடர்பில் இருந்தவர்கள்.
ஒன்பது பேருக்கு எவ்வாறு கிருமி தொற்றியது என்று தெரியவில்லை. பரிசோதனை மூலம் அவர்களிடம் தொற்று இருப்பது தெரிய வந்தது.
வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த எட்டுப் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் நேற்று அறிவிக்கப்பட்டது. இவர்களில் இருவரிடம் தொற்று இருப்பது இங்கு வந்திறங்கியதும் கண்டறியப்பட்டது. எஞ்சிய அறுவரும் இங்கு வந்தது முதல் கட்டாயத் தனிமைத் உத்தரவில் வைக்கப்பட்டிருந்த வேளையில் அவர்களிடம் தொற்று கண்டறியப்பட்டதாக அமைச்சு தனது முதற்கட்ட அறிவிக்கையில் தெரிவித்தது.
சிங்கப்பூரில் நேற்று மொத்தமாக 61 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையும் சேர்த்து இங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 62,913க்கு அதிகரித்தது.
கேடிவி கரவோக்கே தொற்றுக் குழுமத்தில் ஏற்கெனவே 34 பேரிடம் கிருமித்தொற்று கண்டறியப்பட்டதாக வியாழக்கிழமை இரவில் அமைச்சு தெரிவித்தது. புதிதாக நேற்று அறிவிக்கப்பட்டவர்களையும் சேர்த்து இந்தக் குழுமத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 120ஆக அதிகரித்துவிட்டது.
கடந்த திங்கட்கிழமை முதல் இங்குள்ள 11 கேடிவி கூடங்களுக்குச் சென்றோரிடம் தொற்று இருப்பது படிப்படியாகக் கண்டறியப்பட்டு வருகிறது.
வியட்னாமில் இருந்து சமூக வருகையில் சிங்கப்பூருக்கு வந்த உபசரிப்புக் குழுவிடமும் அவர்களிடம் நெருங்கிப் பழகியவர்களிடமும் அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் கூடங்களுக்கு இக்குழுவினர் அடிக்கடி சென்றதாகத் தெரிய வந்தது.
இத்தகைய கூடங்களில் உப
சரிப்புச் சேவைகள் நடத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் இவற்றில் பெரும்பாலானவை தொழிலை மீண்டும் தொடங்கும் வகையில் உணவு, பானக் கடைகளாக உருமாற்றம் கண்டிருந்தன.
இதுபோல உருமாற்றம் கண்ட மூன்று கடைகளில் பாதுகாப்பு நடைமுறை விதிமீறல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவற்றின் உரிமம் உடனடியாகப் பறிக்கப்பட்டதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், விதிமீறலுக்காக 11 கடைகளுக்கும் 31 தனிப்பட்டவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அது கூறியுள்ளது.
இதற்கிடையே, கேடிவி கிருமித்தொற்று குழுமத்தால் திடீரென சிரமம் எழுந்துள்ளது. இரவுக்கூட தொழில்களிலும் நாட்டின் பொருளியல் மறுதிறப்பு திட்டங்களிலும் இதன் தாக்கம் இருக்கக்கூடும் என்று தெரிகிறது.
இந்தத் தொற்றுக் குழுமத்திற்குச் சென்றவர்களில் பலரும் கிருமி தொற்றியதை அறிவதற்கான பரிசோதனைக்குச் செல்லாததால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்
கூடும் என்று பேராசிரியர் டியோ இக் யிங் போன்ற மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

