உடற்பயிற்சிக்கூடங்களில் மீண்டும் கடுமையாகும் கட்டுப்பாடுகள்
கட்டுடல் பயிற்சிக்கூடங்கள் உடலுறுதி நிலையங்கள் போன்றவற்றின் உள்ளரங்க நடவடிக்கை களுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக்கப் படுகின்றன. வரும் திங்கட்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை இந்தக் கடுமை நடப்பில் இருக்கும் என கொவிட்-19க்கான அமைச்சுகள்நிலை பணிக்குழு தெரி வித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் ஐந்து நாள் இடைவெளியில் மீண்டும் கடுமையாக்கப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது.
சமூகத் தொற்றைத் தடுக்கும் வகையில் கடுமையாக்கப் படும் கட்டுப்பாடுகளால் இந்தக் கூடங்களில் ஒன்றாக பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கை மீண்டும் இரண்டாகக் குறைக்கப்படுகிறது. அத்துடன் பரிசோதனைக்குச் செல்லாத, தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் உட்பட ஒவ்வொரு குழுவிலும் இடம்பெறுவோரின் எண்ணிக்கை 30க்குள் இருக்க வேண்டும் என மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. பயிற்றுநரும் இந்த எண்ணிக்கையில் அடங்குவார்.
அதே நேரம் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டோர் ஐவராகச் சேர்ந்து பயிற்சி பெறலாம். கிருமித்தொற்றிலிருந்து மீண்டவரும் இந்த எண்ணிக்கை யில் உட்படுவர் என்றது பணிக்குழு.
தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை நிலவரம் மீது அதிகாரிகள் கவனம்
கேடிவி குழுமத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் செல்லும் நிலை ஏற்பட்டால் மருத்துவ மனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்வதும் மேலும் சில கட்டுப்பாடுகளும் அவசியமாகலாம். சுகாதார அமைச்சர் ஓங் யி காங் இவ்வாறு கூறியுள்ளார்.
ஒரு வாரத்திற்கும் குறைந்த காலத்தில் கேடிவி கூடங் களில் பெருகிய தொற்றுகளின் எண்ணிக்கை சிங்கப்பூ ரிலேயே ஆகப்பெரிய தொற்றுக் குழுமத்தை உருவாக்கி விட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கைகளின் நிலவரத்தை அதிகாரிகள் அணுக்கமாகக் கவனித்து வருவதாக திரு ஓங் தெரிவித்தார்.
"கொவிட்-19 நோயாளிகளுக்காக 1,000 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தீவிர சிகிக்சைப் பிரிவில் மூத்த வயது கொவிட்-19 நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இருப்பினும், அடுத்த சில நாட்களில் மேலும் பலர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப் பட்டால், அவர்களின் எண்ணிக்கை 25, 50 என்று இரண்டாவது வாரத்தில் அதிகரித்து மறு வாரம் 100 ஆகவும் அதற்கு அடுத்த வாரத்தில் 200, பின்னர் 500 என்று கூடிக்கொண்டே சென்று ஐந்தாவது வாரத்தில் 1,000 நோயாளிகள் என்ற நிலை உருவாகிவிடும்.
"ஐந்தாவது வாரம் வரை நாம் காத்திருக்க முடியாது. நோயாளிகளின் எண்ணிக்கைக் கட்டுப்படாவிட்டால் மூன்றாவது வாரத்திலேயே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டி வரலாம். குறைந்தபட்சம் உயர் விழிப்புநிலையுடன் கூடிய இரண்டாவது கட்டத்திற்கு நாம் திரும்பிச் செல்லும் நிலை ஏற்படலாம்," என்றார் அமைச்சர் ஓங்.

