'தேசிய சின்னங்களை மேலும் புத்தாக்க முறையில் கையாளுங்கள்'

'தேசிய சின்னங்களை மேலும் புத்தாக்க முறையில் கையாளுங்கள்'

2 mins read
0715fd00-1226-4f25-bc33-ebec1393ea3a
-

தேசிய கீதம், நாட்­டுக் கொடி போன்ற தேசிய சின்­னங்­களை மேலும் புத்­தாக்­கத்­து­டன் மக்­கள் பயன்­ப­டுத்­து­வதை அர­சாங்­கம் மறு­ஆய்வு செய்­யு­மாறு குடி­மக்­கள் பணிக்­குழு ஒன்று பரிந்­துரை செய்­துள்­ளது.

அதே சம­யம் சின்­னங்­கள் தவ­றா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தைத் தடுக்க, இணை­யத்­தில் ஒருங்­கி­ணைந்த புகார் தளம் ஒன்­றை­யும் தொடங்­க­லாம் என்று தேசிய சின்­னங்­க­ளுக்­கான குடி­மக்­கள் பணிக்­குழு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளது.

பணிக்­கு­ழு­வைச் சேர்ந்த 47 சிங்­கப்­பூ­ரர்­கள், தங்­க­ளின் கண்­டு­பி­டிப்­பு­களை அறிக்கை வடி­வில் கலா­சார, சமூக, இளை­யர் அமைச்­சுக்­குச் சமர்ப்­பித்­தி­ருந்­தது.

கொடி வணக்­கம் செய்­வதை அதி­கா­ரப்­பூர்வ மொழி­களில் நடத்­து­வது, தேசிய தின அணி­வ­குப்­பின்­போது பற்­று­றுதி மற்­றும் தேசிய கீதத்­தைச் செவிப்­பு­லன் குன்­றி­ய­வர்­களும் புரிந்­து­கொள்­வ­தற்­காக சைகை­மொ­ழியை இணைப்­பது போன்ற ஆலோ­ச­னை­க­ளை­யும் பணிக்­குழு முன்­வைத்­துள்­ளது.

பற்­று­று­தி­யில் இடம்­பெ­றும் 'இனம், மொழி, மதம் ஆகிய வேற்­று­மை­களை மறந்து' என்ற வாச­கத்தை அகற்­று­வது, அதி­கா­ரத்­துவ தேசிய சின்­னங்­களை அதி­கப்­ப­டுத்­து­வது போன்ற பல்­வேறு விவா­தங்­கள் கடந்த நான்கு மாதங்­க­ளாக நடந்து முடிந்­ததை அடுத்து 40 பக்­கங்­கள் கொண்ட இந்த அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இறு­தி­யாக, பற்­று­று­தி­யில் மாற்­ற­மில்லை என்­றும் கூடு­தல் தேசிய சின்­னங்­கள் தேவை­யில்லை என்­றும் முடி­வாகி அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

மக்­கள் பணிக்­கு­ழு­வின் அறிக்­கையை இணை­யத்­தில் படிக்­கு­மாறு கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்­சர் எட்­வின் டோங் நேற்று கேட்­டுக்­கொண்­டார்.

தேசிய தினம் நெருங்­கிக்­கொண்­டி­ருக்­கும் நிலை­யில் இச்­சின்­னங்­கள் அர்த்­த­ம­ளிப்­பதை ஆராய இது ஒரு நல்ல வழி, சரி­யான நேரம் என்­றார்.

பொது­மக்­களில் கிட்­டத்­தட்ட 1,500 பேரி­ட­மி­ருந்து கருத்து திரட்­டிய பணிக்­குழு, நாட்­டுக் கொடியை சிங்­கப்­பூ­ரர்­கள் உயர்­வா­கக் கரு­து­கி­றார்­கள் என்­ப­தை­யும் கொடி­யைச் சரி­யான முறை­யில் காட்­சிக்கு வைப்­ப­தில் அக்­கறை எடுக்­கி­றார்­கள் என்­ப­தை­யும் கண்­ட­றிந்­தது.

இருப்­பி­னும், தேசிய கீதத்­தில் இடம்­பெ­றும் வரி­களை மக்­கள் புரிந்­து­கொண்­டுள்­ளதை மேலும் வலு­வாக்­க­லாம் என்று பணிக்­குழு சுட்­டி­யுள்­ளது.

அத்­து­டன் தேசிய அடை­யா­ளம் தொடர்­பான உரை­யா­டல்­களை ஊக்­கு­விக்­கும் அதி­கப்­ப­டி­யான ஆற்­றல் பற்­று­று­திக்கு உண்டு என்­றும் பணிக்­குழு கூறி­யுள்­ளது.

பள்­ளிப் பரு­வத்­தை­யும் தாண்டி மக்­க­ளின் அன்­றாட வாழ்­வில் தேசிய சின்­னங்­க­ளுக்கு மேலும் முக்­கி­யத்­து­வம் கொடுக்­கப்­பட வேண்­டும் என்­றது அறிக்கை.

சின்­னங்­க­ளின் பயன்­பாடு தொடர்­பில் விதி­மு­றை­க­ளைத் தளர்த்­தி­னா­லும் அதே சின்­னங்­கள் தவ­றா­கச் சித்­தி­ரிக்­கப்­பட்­டி­ருந்­தால் அதை மக்­கள் உடனே தெரி­விக்க மின்­னி­லக்­கப் புகார் தளம் ஒன்று தொடங்­கப்­ப­ட­லாம் என்­றது பணிக்­குழு.