சிங்கப்பூரின் மூத்த தமிழறிஞர் பா.கேசவன் காலமானார்

சிங்கப்பூரின் மூத்த தமிழறிஞர் பா.கேசவன் காலமானார்

3 mins read
45f1805e-623a-4696-bb2e-f1ff84c9db98
-

எஸ்.வெங்­க­டே­‌ஷ்­வ­ரன்

மூத்த தமி­ழா­சி­ரி­யர்­களில் ஒரு­வ­ரும் தமி­ழ­றி­ஞ­ரும் சமூக ஆர்­வ­ல­ரு­மான திரு பா.கேச­வன் கால­மா­னார். அவ­ருக்கு வயது 85. கடந்த நான்கு நாட்­க­ளாக உடல்­நிலை மோச­ம­டைந்த நிலை­யில் நேற்று காலை 6.45 மணி அள­வில் இல்­லத்­தில் இயற்கை எய்­தி­னார். அவ­ரு­டைய இழப்பு சிங்­கப்­பூர் தமிழ்ச் சமூ­கத்­துக்­குப் பேரி­ழப்­பா­கும் என்று பல­ரும் இரங்­கல் தெரி­வித்­த­னர்.

"தமிழ் மொழி­யில் ஆழ­மான அறி­வைப் பெற்­றி­ருந்த அவ­ரி­டம் சந்­தே­கம் கேட்­டால் மிகத் தெளி­வாக விளக்­கு­வார். மொழிப் பற்­றும் இனப்­பற்­றும் மிக்­க­வர்," என்று கூறி­னார் சிங்­கப்­பூர் தமி­ழா­சி­ரி­யர் சங்­கத்­தின் ஆலோ­ச­க­ரும் 60 ஆண்­டு­கால நண்­ப­ரு­மான சி.சாமிக்­கண்ணு. பணி ஓய்வு பெற்ற பின்­ன­ரும் கல்வி அமைச்­சின் பல பதிப்­பு­க­ளுக்கு மொழி­வள ஆசி­ரி­ய­ராக அவர் பணி­பு­ரிந்­த­தா­க­வும் கூறி­னார்.

'சிங்­கப்­பூர் சித்­தார்த்­தன்' என்ற புனை­பெ­ய­ரில் கட்­டு­ரை­க­ளை­யும் இலக்­க­ணங்­க­ளை­யும் எழுதி வந்த இவர், 1970, 1980களில் தமிழ் வானொ­லி­யில் படைத்த 'எளிய தமிழ்' நிகழ்ச்சி வழி தமிழ் மொழி­யை­யும் இலக்­க­ணத்­தை­யும் எளி­தா­கக் கற்­றுக்­கொண்­ட­வர்­கள் பலர். ஒரு தலை­மு­றைக்கே இலக்­க­ணத்தை கற்­றுத் தந்த இந்த உரை­கள் 'இலகு தமி­ழில் இனிக்­கும் தமிழ் இலக்­க­ணம்' என்ற தலைப்­பில் நூலாக வெளி­வந்­தது. 2005ல் தமி­ழக அர­சின் 'சிறந்த இலக்­கண நூல்' விரு­தைப் பெற்ற இந்­நூல், இவ்­வி­ரு­தைப் பெற்ற முதல் நூல்.

இலக்­கி­யம், இலக்­க­ணக் கட்­டு­ரை­க­ளைப் படைத்­துள்ள திரு கேச­வன், 'தமிழ் வாழும்', 'தமிழ் நலம் தமிழர்க்கு ஆக்­கம்', 'நமது இலக்கு என்ன? அதை அடை­வது எப்­படி', 'மெய்ப்­பொ­ருள் காண்­போம்! மேனிலை அடை­வோம்!' ஆகிய நூல்­க­ளை­யும் எழு­தி­யுள்­ளார்.

தஞ்­சை­மா­வட்­டம், மன்­னார்­குடி, கடுக்­கக்­காட்­டில் பிறந்த திரு கேச­வன், 1952ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூ­ரில் குடி­யே­றி­னார். படிப்பை முடித்த அவர், வாசு­கித் தொடக்­கப் பள்­ளி­யில் தம் ஆசி­ரி­யர் பணி­யைத் தொடங்­கி­னார். தொடர்ந்து உயர்­நி­லைப் பள்ளி, தொடக்­கக்­கல்­லூ­ரி­களில் தமி­ழா­சி­ரி­ய­ராக இருந்­தார். பின்­னர் தமிழ்ப் பள்ளி, தமிழ்க் கல்­விப் பிரி­வுக்­குக் கண்­கா­ணிப்பு அதி­கா­ரி­யா­க­வும் பணி­யாற்­றி­னார்.

சிங்­கப்­பூர் பாடத்­திட்ட மேம்­பாட்­டுக் கழ­கத்­தி­லும் அற­நெ­றிக் கல்­வித்­திட்­டக் குழு­வி­லும் பணி­யாற்­றிய அவர், கல்வி மேம்­பாட்டு அதி­கா­ரி­யா­க­வும் பணி­பு­ரிந்­துள்­ளார். கல்வி அமைச்­சின் தமிழ்­மொழி, இலக்­கிய பாடத்­திட்ட குழு­வின் செய­லா­ள­ரா­க­வும் இருந்­துள்­ளார்.

ஓய்­வு­பெற்­ற­பின் உம­றுப்­பு­ல­வர் தமிழ்­மொழி நிலை­யம், தேசி­யக் கல்­விக்­க­ழ­கம் ஆகி­ய­வற்­றில் தமி­ழா­சி­ரி­ய­ரா­க­வும் விரி­வு­ரை­யா­ள­ரா­க­வும் பணி­பு­ரிந்­தார். தமிழ் முரசு, கல்வி அமைச்சு, தமி­ழா­சி­ரி­யர் சங்­கம் இணைந்து வழங்­கும் நல்­லா­சி­ரி­யர் விருது நிகழ்ச்­சி­யில் 'வாழ்­நாள் சாத­னை­யா­ளர் விருது', 2012ல் முதன்­மு­த­லில் இவ­ருக்கு அளித்­துச் சிறப்­பிக்­கப்­பட்­டது.

"கவி­மாலை தொடங்­கப்­பட்ட காலத்­தி­லி­ருந்து அதன் பார்­வை­யா­ள­ரா­கப் பங்­கேற்று ஆலோ­ச­னை­களும் ஆத­ர­வும் நல்­கிய அவரே, அமைப்­பைப் பதிவு செய்ய நினைத்­த­போது தலை­வ­ரா­கப் பொறுப்­பேற்­கக் கோரி­னோம்," என்­றார் கவி­மாலை நிறு­வ­ன­ரும் 'மக்­கள் மனம்' மாத இத­ழின் ஆசி­ரி­ய­ரு­மான திரு பிச்­சி­னிக்­காடு இளங்கோ, 69.

கவி­மாலை அமைப்­பின் முதல் அதி­கா­ர­பூர்வ தலை­வர், சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம், தமி­ழர் பேரவை ஆகிய அமைப்­பு­க­ளின் தலை­வர், தமிழ்­மொ­ழிப் பண்­பாட்­டுக் கழ­கத்­தின் செய­லா­ளர் என பல தமிழ், சமூக அமைப்­பு­களில் பங்­காற்­றிய திரு கேச­வன், பாஸ்­கர் ஆர்ட்ஸ் அக­ட­மி­யின் இயக்­கு­ந­ரா­க­வும் செயல்­பட்­டுள்­ளார்.

"மொழி, இலக்­க­ணம், இலக்­கி­யம், கல்வி, கலை, அற­நெறி, இனம், சமூ­கம் முத­லி­ய­வற்­றில் திரு பா.கேச­வன் ஆற்­றி­யுள்ள பணி­கள் அளப்­ப­ரி­யன," என்று குறிப்­பிட்­டார் சிங்­கப்­பூ­ரின் மூத்த தமி­ழ­றி­ஞர் முனை­வர் சுப.திண்­ணப்­பன்.

"தமி­ழா­சி­ரி­யர் என்­கிற முறை­யில் சமூ­கத்­திற்கு அரும்­பா­டு­பட்­டுள்­ளார். 1994 முதல் 1999ஆம் ஆண்டு வரை தமி­ழர் பேரவை தலை­வ­ராக இருந்­த­போது மொழி, சமூ­கம் மேம்­பட பல­வ­கை­யில் பங்­க­ளித்­துள்­ளார்," என்­றார் தமி­ழர் பேரவை தலை­வர் வே.பாண்­டி­யன்.

மனைவி திரு­மதி சாந்­த­கு­மாரி, 78, பிள்­ளை­கள் திரு­மதி கோமதி, 52, திரு ‌சியாமா சுந்­தர், 39, மூன்று பேரப்­பிள்­ளை­களை விட்­டுச் சென்­றுள்­ளார். 131 லவண்­டர் சாலை­யில் உள்ள 'சிங்­கப்­பூர் காஸ்­கேட்' மையத்­தில் இன்­றும் நாளை­யும் திரு கேச­வன் அவர்­க­ளின் நல்­லு­ட­லுக்கு இறுதி அஞ்­சலி செலுத்­த­லாம். நாளை மண்­டாய் தக­னச்­சா­லை­யில் அன்­னா­ரின் நல்­லு­டல் தக­னம் செய்­யப்­படும்.