விவேக அஞ்சல்பெட்டிகள் மூலம் தங்களின் கடிதங்களை பொங்கோல் வாசிகள் சிலர் மேலும் வசதியாகப் பெறவுள்ளனர். அடுத்த வெள்ளிக்கிழமை முதல் 'போஸ்ட்பால்' என்ற அமைப்புமுறை மூலம் சுமாங் லேன் புளோக் 226B குடியிருப்பாளர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவுள்ளது. கைபேசி செயலி ஒன்றின் மூலம் தங்களுக்கு அஞ்சல் வந்திருப்பதையும் தெரிவிக்கும் இந்த 'போஸ்ட்பால்'.
எடுக்கப்படாத அஞ்சல் எத்தனை என்பதைக் குடியிருப்பாளர்கள் கண்காணிக்க முடிவதுடன் தங்கள் சார்பாக அஞ்சலைப் பெற்றுக்கொள்ளும் அனுமதியையும் புளோக்வாசிகள் பிறருக்கு அளிக்க முடியும். 'சிங்போஸ்ட்' நிறுவனத்துடன் எந்திரவியல், தானியக்க நிறுவனம் 'ப்பிபிஏ குருப்' இணைந்து இவ்விவேக அஞ்சல்பெட்டி திட்டத்தை உருவாக்கியது.
புளோக்கின் 96 குடும்பங்களும் அஞ்சலை இத்தகைய விவேக அமைப்புமுறையில் பெற்றுக்கொள்ளும் முன்னோட்டத்தின் இரண்டாவது குழுவாகும். இதற்குமுன் கிளமெண்டி வட்டாரத்தில் இரண்டு புளோக்குகளில் இம்முன்னோட்டத் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. 80% வீடுகள் திட்டத்தின் கீழ் இணைய விண்ணப்பித்ததுடன் விவேக அமைப்புமுறை மூலம் ஏறத்தாழ 20,000 அஞ்சல்கள் விநியோகமும் செய்யப்பட்டன.
பொங்கோல் வட்டாரத்தில் இளம் குடும்பங்கள் அதிகம் இருப்பதால் இத்திட்டத்திற்கு கிளமெண்டி வட்டாரத்தைக் காட்டிலும் கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என்று சிங்போஸ்ட் உள்ளூர் அஞ்சல் மற்றும் பொட்டலப் பிரிவின் தலைவர் திருவாட்டி நியோ சூ யின் தெரிவித்தார். பலரும் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதால் இத்திட்டம் பேருதவியாக இருக்கும் என்று பொங்கோல் வெஸ்ட் எம்பி திருவாட்டி சுன் ஷுவெலிங் கூறினார்.