புக்கிட் பாத்தோக் நகரப் பூங்காவின் உச்சியில் மண் அரிப்பு ஏற்பட்டதாகவும் அதன் விளைவாக அங்கிருந்த குவாரிக்குள் மண் விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனால் சரிவிலிருந்து நீர் வேகமாக வழிந்தோடி சாலைக்குள் புகுந்தது.
நேற்று முன்தினம் 7 மணி அளவில் புளோக் 383 குட்வியூ கார்டன்ஸ் அருகில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக தென் மேற்கு வட்டார மேயர் லோ யென் லிங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
இதுகுறித்து தேசிய பூங்காக் கழகம், பொது பயனீட்டுக் கழகம், போலிஸ், சுவா சூ காங் நகர மையம் போன்ற அமைப்புகளிடம் தகவல் தெரிவித்துவிட்டதாக அவர் கூறினார். அண்மைய நாட்களில் தொடர்ந்து பெய்த கனமழையால் மண் அரிப்பு ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தேசிய பூங்காக் கழகத்தின் பாதுகாப்புப் பிரிவின் குழுத் தலைவர் திரு லிம் லியாங் ஜிம் கூறினார்.
"புக்கிட் பாத்தோக் நகரப் பூங்காவின் உச்சியில் இருக்கும் பாறை திடமாக இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க விசாரணை நடத்தப்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிட்டு குவாரி தொடர்ந்து மூடப்பட்டுள்ளது," என்று திரு லிம் கூறினார்.
தகவல் தெரிவித்ததும் உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு அமைப்புகளிடம் திருவாட்டி லோ நன்றி தெரிவித்தார்.
சாலையில் மரம் ஒன்று சாய்ந்து கிடந்ததால் புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 5லிருந்து போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது.
ஒன்றரை மணி நேரத்துக்குள் சாய்ந்து கிடந்த அந்த மரம் அகற்றப்பட்டது.
"சம்பவ இடத்துக்கு விரைந்த பொது பயனீட்டுக் கழக அதிகாரி கள் அப்பகுதியில் தண்ணீர் குழாய்கள் உடையவில்லை என்று உறுதி செய்தனர்," என்றார் திருவாட்டி லோ.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று கனமழை காரணமாக சிங்கப்பூரில் உள்ள பல வட்டாரங்களில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக பொது பயனீட்டுக் கழகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
தென்மேற்கு பருவமழை காரணமாக இம்மாதத்தின் முதல் 15 நாட்
களுக்கு சிங்கப்பூரில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று
சிங்கப்பூர் வானிலை மையம்
முன்னுரைத்தது.

