அங் மோ கியோ வட்டாரத்தில் 52 வயது ஆடவரைக் கொன்றதாக வியட்னாமிய பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தாக்குதலின்போது அந்தப் பெண்ணும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. 39 வயது நுயேன் நோக் ஜியாவ் மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை 1 மணி அளவில் புளோக் 562 அங் மோ கியோ அவென்யூ 3ன் ஐந்தாவது மாடியில் உள்ள பொது தாழ்வாரத்தில் திரு சோய் வாங் கியூங்கை அவர் கொன்றதாக நம்பப்படுகிறது.
நடு இரவில் யாரோ சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என தகவல் கிடைத்து அதிகாரி கள் அங்கு விரைந்தபோது, உடலில் காயங்களுடன் ஜியாவும் திரு சோயும் வீட்டுக்கு வெளியே கிடப்பதை அவர்கள் கண்டனர்.
இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதையடுத்து, திரு சோய் உயிரிழந்தார். ஜியாவ் தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திரு சோயின் முதல் மனைவி ஹாங்காங்கைச் சேர்ந்தவர் என்று அவரது அண்டைவீட்டாரான திருவாட்டி ஓங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார். திரு சோய் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகவும் அந்தப் பெண்ணைக் கடந்த ஆண்டிலிருந்து பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.
பொங்கோல் சென்ட்ரல் அருகில் உள்ள சுமாங் வாக்கில் 46 வயது ஆடவர் ஒருவரைக் கத்தி யால் குத்திக் கொன்றதாக 43 வயது ஹெங் பூன் சாய் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
திரு கிம் வீ மிங்கை, புளோக் 326ஏ ஆறாவது மாடியில் உள்ள வீட்டுக்கு வெளியே சிங்கப்பூரரான ஹெங் கடந்த புதன்கிழமையன்று கொலை செய்ததாக நம்பப்படுகிறது. சம்பவம் குறித்து கடந்த புதன்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தை போலிசார் அடைந்தபோது வீட்டுக்கு வெளியே ஹெங் கத்திக்குத்துக் காயங்களுடன் சுயநினைவின்றி கிடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மனநலப் பரிசோதனைக்காக சாங்கி சிறைச்சாலையின் மருத்துவ நிலையத்தில் ஹெங் விசாரணைக் காவலில் வைக்கப்படுவார்.

