சிங்கப்பூரில் 50 ஆண்டுகளில் முதன்முதலாக நீண்டகால நிலப் பயனீட்டுத் திட்ட மறுபரிசீலனை, நிச்சயமில்லாத எதிர்காலத்தை கைக்கொள்ளக்கூடிய பல விருப்ப உரிமைகளையும் உள்ளடக்க இருக்கிறது.
நகர மறுசீமைப்பு ஆணையம், நீண்டகால நிலப் பயனீட்டுத் திட்டங்கள் பற்றி சிங்கப்பூரர்களிடம் இருந்து கருத்துகள், யோசனைகளைப் பெற விரும்புகிறது. அந்தத் திட்டங்கள் இப்போது மறுபரிசீலனை செய்யப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக ஓராண்டு முழுவதும் ஆலோசனைக் கூட்டம் நடக்கும். அதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் திரட்டப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
சமூகம், மக்கள்தொகை, சுற்றுச்சூழல், தொழில்நுட்ப மாற்றங்கள் காரணமாக நிச்சயமில்லாத நிலை அதிகமாகி வருகிறது.
இந்நிலையில் இடம்பெறக்கூடிய நீண்டகால திட்ட மறுபரிசீலனை, மீள்திறன், நீக்குப்போக்கு, எல்லாரையும் உள்ளடக்கும் நிலை ஆகியவற்றில் ஒருமித்த கவனம் செலுத்தும் என்றது ஆணையம்.
திட்டமிடுவதில் இடம்பெறக்கூடிய நீக்குப்போக்கு காரணமாக கொவிட்-19 போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் எதிர்கால தலைமுறையினர் அதற்கு ஏற்ப மாறிக்கொள்ள வழி ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்டகால திட்ட மறுபரிசீலனைக்கான பொதுக் கலந்துரையாடல்கள் இந்த மாதத்திற்கும் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்கும் இடையில் நான்கு கட்டங்களாக நடக்கும். ஒவ்வொன்றும் நான்கு மாதங்கள் நீடிக்கும்.
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீயும் இரண்டாம் தேசிய வளர்ச்சி அமைச்சர் இந்திராணி ராஜாவும் நேற்று 20 இளையர்களுடன் பிரத்தியேகமாக அந்தக் கலந்துரையாடலை தொடங்கி வைத்தனர்.
அதைத் தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் டெஸ்மண்ட் லீ, ஒரு நகரமாகவும் அதேவேளையில், ஒரு நாடாகவும் சிங்கப்பூர் இருக்கிறது என்பதைச் சுட்டினார்.
"நம்முடைய நகர எல்லைக்குள் உட்பட்ட வரம்புகளைக் கொண்டு நாம் ஒரு நாட்டுக்குத் தேவையான அனைத்தையும் நிறைவேற்ற மிகவும் புத்தாக்கத் திறனுடன் செயல்பட வேண்டி இருக்கிறது," என்று அவர் தெரிவித்தார்.
ஆகையால், இன்று, நாளைக்கு மட்டும் என்று இல்லாமல் நீண்டகாலப் போக்கில் நாம் திட்டமிட வேண்டி இருக்கிறது என்றார் அவர்.
இது ஒரு சவால்மிக்க பணி என்று குறிப்பிட்ட அவர், இருந்தாலும் ஏராளமான வாய்ப்புகளும் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரை இன்னும் சிறந்த இடமாக உருவாக்குவதற்கு உதவும் பல வழிகளை நாம் கற்பனை செய்து பார்க்க முடியும் என்ற அமைச்சர், இதற்கு அனைத்து சிங்கப்பூரர்களின் ஆதரவு தேவை என்பதை வலியுறுத்தினார்.
இதன் காரணமாகவே இந்தக் கலந்துரையாடல் தொடங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
நீண்டகால திட்ட மறுபரிசீலனையில் பங்கெடுத்துக்கொள்ளும்படி ஒவ்வொரு சிங்கப்பூரரையும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் கருத்துகளை https://www.ura.gov.sg/Corporate/Planning/Long-Term-Plans/Long-Term-Plan-Review என்ற இணையம் வழியிலான ஆய்வில் தெரியப்படுத்தலாம்.
அடுத்தடுத்த கலந்துரையாடல்களில் எப்படி கலந்துகொள்வது என்பது பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

