உஸ்பெகிஸ்தானில் இருந்து சிங்கப்பூர் திரும்பிய பிறகு, தெம்பனிஸ் ரோவர்ஸ் காற்பந்துக் குழுவில் இரண்டாவது ஆட்டக்காரர்க்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 25ஆம் தேதியில் இருந்து இம்மாதம் 19ஆம் தேதிவரை டாஷ்கென்ட் நகரில் ஆறு ஆசிய வெற்றியாளர் லீக் தகுதிச் சுற்று ஆட்டங்களில் அக்குழு பங்கேற்றது.
அந்தப் பயணத்தில் இடம்பெற்றவர்களில் இரண்டாவதாக ஒருவரையும் கொரோனா தொற்றியிருப்பதைச் சிங்கப்பூர் பிரிமியர் லீக் குழுக்களில் ஒன்றான தெம்பனிஸ் ரோவர்ஸ் உறுதிசெய்து இருக்கிறது.
"அந்த விளையாட்டாளர் முன்னதாக மேற்கொண்ட பரிசோதனையில் 'தொற்று இல்லை' என்று முடிவு வந்தது. ஆயினும், ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ள அவருக்கு நேற்று முன்தினம் காய்ச்சல் கண்டது. அதைத் தொடர்ந்து, அன்று மாலையிலேயே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதைப் பரிசோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளன," என்று ஓர் அறிக்கை வாயிலாக தெம்பனிஸ் குழு தெரிவித்துள்ளது.
"இப்போது அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. கூடுதல் தகவல் கிடைத்தபின், தேவைப்பட்டால் அதுபற்றி தெரிவிக்கப்படும்," என்றும் அக்குழு கூறியிருக்கிறது.
முன்னதாக, தெம்பனிஸ் குழுவின் தற்காப்பு ஆட்டக்காரர்களில் ஒருவர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவர் கூ டெக் புவாட் மருத்துவமனையில் கண்காணிப்பின்கீழ் இருப்பதாகக் கடந்த புதன்கிழமை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
அந்த விளையாட்டாளர் இன்னும் தடுப்பூசி போடவில்லை என்றும் அவரிடம் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவில்லை என்றும் நம்பப்படுகிறது.
தெம்பனிஸ் குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற அனைவரும் வெவ்வேறு ஹோட்டலில் இரு வாரங்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

