சிங்கப்பூர் பயணத் துறைக் கழகம் சிங்கப்பூரில் மெய்நிகர் துணிகரச் சுற்றுலா மூலம் இந்திய சந்தையை கவர்ந்து ஈர்க்க முயன்று வருகிறது.
கொவிட்-19 காரணமாக இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் பயணங்கள் முடங்கிக் கிடக்கின்றன. இந்த நிலையில், இந்தியாவின் கணினி உயிரோவியத் துறை நிறுவனமான 'வூட்கிட்ஸ் அண்ட் கிரீன் கோல்டு அனிமேஷன்' என்ற நிறுவனத்துடன் கழகம் உடன்பாடு கண்டிருக்கிறது.
சோட்டா பீம் என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான கேலிச் சித்திரமாகும். அதை மையமாகக் கொண்ட குறுந்தொடர் சிங்கப்பூர் முழுவதையும் காட்டுகிறது. அந்தத் தொடர் ஏழு பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொன்றும் சுமார் 3 நிமிடங்கள் ஓடக்கூடியவை.
சோட்டா பீமும் அந்தக் கதாபாத்திரத்தின் நண்பர்களும் சிங்கப்பூரின் மிகப் பிரபலமான இடங்களை சுற்றிப் பார்ப்பதை அந்தத் தொடர் சித்திரிக்கிறது.
ஜுவல் சாங்கி விமானநிலையம், சிங்கப்பூர் பூ மலை, விலங்கியல் தோட்டம், நைட் சஃபாரி போன்ற பல இடங்களுக்கும் சோட்டா பீம் தன் நண்பர்களுடன் வலம் வருவதைத் அந்தத் தொடரில் பார்க்கலாம்.
"இந்தியர்கள் குடும்பமாக வந்து செல்லும் பிரபலமான இடமாக சிங்கப்பூர் எப்போதுமே இருந்து வருகிறது. இந்தப் புதிய திட்டம் இந்தியாவில் உள்ள ரசிகர்களுக்கு சிங்கப்பூர் பயணத் துறைக் கழகம் அளிக்கும் புன்னகை விருந்து.
"இந்தத் தொடரைக் கண்டு இந்திய ரசிகர்கள் மகிழ்வார்கள் என்பதே எங்கள் நம்பிக்கை," என இந்தியா, மத்திய கிழக்கு, தெற்கு ஆசியாவுக்கான பயணத் துறைக் கழகத்தின் வட்டார இயக்குநர் ஜி.பி. ஸ்ரீதர் தெரிவித்தார்.
இரு தரப்புகளும் தொடர்ந்து ஈடுபாட்டுடன் இருந்துவருவது முக்கியம் என்று அவர் மேலும் தெரிவித்தார். கொவிட்-19க்கு முன்பு சிங்கப்பூரின் மூன்றாவது ஆகப் பெரிய சந்தையாக இந்தியா திகழ்ந்தது. கடந்த 2019ல் 1.42 மில்லியன் இந்தியர்கள் சிங்கப்பூருக்கு வந்து சென்றனர். புதிய குறுந்தொடர் சனிக்கிழமை தொடங்கியது.
வூட்கிட்ஸ் தளத்தில் அது ஆங்கிலம், இந்தி, தமிழ் மொழிகளில் ஒளிபரப்பாகிறது.

