சிங்கப்பூரின் தேசிய தற்காப்பு ஆய்வு முகவையான டிஎஸ்ஓ நேஷனல் லேபோரட்டரிஸ் அமைப்பு, சிங்கப்பூரில் முதன்முதலாக அமைக்கும் உயிரியல் பாதுகாப்பு நிலை-4 ஆய்வுக்கூடம் (BSL-4) 2025ஆம் ஆண்டின் இறுதியில் செயல்பட உள்ளது.
அது ஏறத்தாழ $90 மில்லியன் செலவில் அமையும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.
ஆக உயரிய நிலையிலான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் அந்த ஆய்வுக்கூடம், படுமோசமான மரண நோய்களைக் கையாளுவதில் சிங்கப்பூரின் ஆற்றலை மேம்படுத்தும் என்று டிஎஸ்ஓ அமைப்பின் ஊழியர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அண்மையில் தெரிவித்தது.
அந்தப் புதிய ஆய்வுக்கூடம் டிஎஸ்ஓ அமைப்பின் மரினா ஹில் கட்டடத்தில் அமையும். அது இப்போதைய உயிரியல் பாதுகாப்பு நிலை-3 (BSL-3) ஆய்வுக் கூடங்களுக்கு உறுதுணையாகத் திகழும்.
சிங்கப்பூரில் எட்டு நிலை-3 ஆய்வுக்கூடங்கள் இருக்கின்றன. அவற்றில் இரண்டு கூடங்களை டிஎஸ்ஓ நிறுவனம் நடத்துகிறது.
உலகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் நிலை-4 ஆய்வுக் கூடங்கள் குறைந்தபட்சம் 59 இருக்கின்றன அல்லது கட்டப்பட்டு வருகின்றன.
அமெரிக்கா, பிரிட்டன், சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளிலும் அவை உள்ளன.

