செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
bf13a04c-fe5f-4905-927f-665d6e8d2904
-

'பணம் இருந்தாலே மகிழ்ச்சி இருக்கும் என சொல்ல முடியாது'

அதிக வருமானம் ஈட்டுவோரில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் மற்ற பிரிவினரைவிடக் குறைவு என்று கொள்கை ஆய்வுக் கழகம் நடத்திய அண்மைய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவருகிறது. 2019 நவம்பருக்கும் சென்ற ஆண்டு மார்ச் மாதத்திற்கும் இடையில் 2,000 பேரை உள்ளடக்கி அந்த ஆய்வு நடத்தப்பட்டது.

பெரும்பாலான நேரங்களில் தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறும் மக்களின் விகிதாச்சாரம், அதிக வருமானப் பிரிவினரிடத்தில் ஆகக் குறைவாக இருக்கிறது என்று ஆய்வு கூறுகிறது.

எடுத்துக்காட்டாக, மாதம் $5,000 முதல் $6,999 வரை ஈட்டுவோரில் 18 விழுக்காட்டினர் மட்டுமே தாங்கள் பெரும்பாலான நேரங்களில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறுகிறார்கள். $7,000 அல்லது அதற்கும் அதிகம் ஈட்டுவோரில் இந்த விகிதாச்சாரம் 22 விழுக்காடாக இருக்கிறது.

ஒப்பிட்டுப் பார்க்கையில், மாதம் $3,000 முதல் $4,999 வரை சம்பாதிப்பவர்களில் 23 விழுக்காட்டினர் தாங்கள் பெரும்பாலான நேரங்களில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறுகிறார்கள்.

$1,500 முதல் $2,999 வரை ஈட்டுவோரில் இந்த விகிதாச்சாரம் ஏறத்தாழ 26 விழுக்காடாக இருக்கிறது.

அதேவேளையில், மாதம் $1,500 கூட சம்பாதிக்காத மக்களில் 30 விழுக்காட்டினர் பெரும்பாலான நேரங்களில் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறுகிறார்கள்.

பணம் இருந்தாலே மகிழ்ச்சி வந்துவிடும் என்பது நிச்சயம் அல்ல என ஆய்வு கூறுகிறது.

வலுவான நிலையில் தனியார் வீடு மறுவிற்பனை சந்தை

தனியார் மறுவிற்பனைச் சந்தை உறுதியாக மீண்டு இருக்கிறது. சென்ற ஆண்டு ஏறத்தாழ 8,880 கூட்டுரிமை அடுக்குமாடி வீடுகள் விற்கப்பட்டன. இந்த எண்ணிக்கை, 2019ல் கைமாறிய 7,550 வீடுகளுடன் ஒப்பிடுகையில் 16 விழுக்காடு அதிகம்.

அதோடு, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஏறத்தாழ 7,520 மறுவிற்பனைகள் நடந்துள்ளன. 2013 முதல் 2016 வரை இடம்பெற்ற முழு ஆண்டு விற்பனைகளைவிட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

2018ல் மூன்றாவது காலாண்டில் நிலைமை வேறு மாதிரியாக இருந்தது. காலாண்டு அடிப்படையில் தனியார் வீடுகளின் விற்பனை 45 விழுக்காடு குறைந்திருந்தது. அதற்குப் பிறகும் மறுவிற்பனை வீடுகளுக்கான தேவை குறைவாகவே இருந்து வந்தது. காலாண்டு அடிப்படையில் சராசரி விற்பனை ஏறத்தாழ 1,500 வீடுகளாக இருந்தது.

ஆனால் சென்ற ஆண்டு இரண்டாவது பாதியில் சந்தை சூடுபிடித்தது. இந்த ஆண்டின் முதல் பாதியில் ஒவ்வொரு காலாண்டிலும் 3,700க்கும் மேற்பட்ட வீடுகள் விற்பனையாயின. இந்த நிலவரம் தனியார் மறுவிற்பனை சந்தையில் ஆக்ககரமான அறிகுறியாக தெரியவந்துள்ளது.

மறுவிற்பனை வீடுகளுக்கான தேவை அதிகரித்து இருப்பதால் அண்மையில் பல இடங்களிலும் உள்ள வீடுகளின் விலை கூடி உள்ளது.

சென்ற ஆண்டு இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கூட்டுரிமை அடுக்குமாடி மறுவிற்பனை வீடுகளின் விலை ஒட்டுமொத்த சந்தையைப் பொறுத்த வரை, 4.4 விழுக்காடு கூடியது. சதுர அடி $1,318 என்ற விலையில் வீடுகள் கைமாறின.

இங்கு இருந்தபடி வெளிநாட்டில் வேலை பார்ப்போருக்கு வரி

சிங்கப்பூரில் இருந்தபடியே தொலைவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை பார்க்கும் உள்ளூர்வாசிகள் இப்போது வருமான வரி செலுத்த வேண்டும்.

அவர்களுக்கு கொவிட்-19 காரணமாக கொடுக்கப்பட்ட விதிவிலக்கு காலம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடி வடைந்தது. சென்ற ஏப்ரல் முதல் அத்தகைய ஊழியர் களுக்குச் சலுகை கொடுக்கப்பட்டது. சிங்கப்பூரில் வேலை பார்க்கையில் மக்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்பது பொதுவான சட்டம்.

பொதுவாக வெளிநாடுகளில் தங்கி வேலை பார்க்கும் சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் வேலை பார்க்கும் நாட்டிலேயே வரி செலுத்துவார்கள். ஆனால் தொற்று காரணமாக அவர்களில் பலரும் சிங்கப்பூருக்கு வந்து இங்கிருந்து தொடர்ந்து வேலை பார்க்க முடிவு செய்தனர்.

அவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகை முடிந்துவிட்டது என்றாலும் இன்னமும் இங்கு தங்கி இருந்தபடியே வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் மக்கள் தங்களுக்கான வருமான வரி தொடர்பில் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திற்குக் கோரிக்கை விடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.