சிங்கப்பூரில் உள்ள பல ஈரச்சந்தைகளில் மீன் கடைகள் மூடப்பட்டிருந்தாலும் இதர கடைகளில் வர்த்தகம் நேற்று பொதுவாக வழக்கம் போல் இருந்திருக்கிறது. உதாரணமாக, யூஹுவா வில்லேஜ் ஈரச்சந்தை மற்றும் உணவங்காடியில் பலர் நீளமான வரிசையில் நின்று தேவையான மளிகைப் பொருட்களை வாங்கினர்.
வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு இடைவெளியை நன்கு கடைப்பிடித்ததாகவும் அங்கு நேரில் சென்ற ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
மாட்டிறைச்சி, கோழி இறைச்சி உள்ளிட்டவற்றை விற்கும் 44 வயது மாரியாட்டி ரஹிம், தனது கடையில் விற்பனை சூடுபிடித்ததாகச் சொன்னார்.
ஹஜ்ஜுப் பெருநாள் நெருங்குவது அதற்குக் காரணம் என்றும் யூஹுவா ஈரச்சந்தையில் அவருடைய கடை மட்டும்தான் ஹலால் சான்றிதழ் பெற்ற கடை என்றும் அவர் குறிப்பிட்டார். நாளை ஹஜ்ஜுப் பெருநாள்.
சனிக்கிழமையைக் காட்டிலும் நேற்று கூடுதலானோர் ஈரச்சந்தைக்கு வந்தததாக இதர சில கடைக்காரர்களும் கூறினர்.
மீன் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் எவ்வித அச்சமுமின்றி கடைகளுக்கு வருகை தந்திருக்கலாம் என்பது அவர்களின் கருத்து.
எனினும், ஈரச்சந்தையில் யாருக்காவது கிருமித்தொற்று ஏற்பட்டால் தங்களின் கடைகளை மூடவேண்டிய சூழல் ஏற்படலாம் என்ற கவலை அவர்களிடையே உள்ளது.
ஜூரோங் மீன்பிடி வர்த்தகத் துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டதால் பெரிய, சிறிய வர்த்தகர்கள் பலர் வேறு இடங்களிலிருந்து மீன்களைத் தருவிக்க அவசர ஏற்பாடுகளைச் செய்ய முயன்றனர்.
ஜூரோங் துறைமுகம், சிங்கப்பூரில் விற்பனைக்கு மீன்களை விநியோகம் செய்யும் ஆக முக்கியமான இடம்.
மீன்பிடி வர்த்தகத் துறைமுகம், ஹோங் லிம் சந்தை ஆகிய இரண்டு இடங்களிலும் ஏற்பட்டுள்ள கிருமித்தொற்றுக்குத் தொடர்பு உள்ளது. சிங்கப்பூரில் இரண்டு மீன்பிடி வர்த்தகத் துறைமுகங்கள் உள்ளன.
ஜூரோங் துறைமுகம் சிங்கப்பூரின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
மற்றொன்று, வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் சினோக்கோ மீன்பிடி வர்த்தகத் துறைமுகம்.
ஆனால், சினோக்கோ மீன்பிடி வர்த்தகத் துறைமுகம் 2023ஆம் ஆண்டுக்குள் மூடப்படும் என்று அதிகாரிகள் சென்ற ஆண்டு தெரிவித்தனர்.
கடந்த சில ஆண்டுகளாகப் பலர் விற்பனைக்காக அங்கிருந்து மீன்களை வாங்காதது அதற்குக் காரணம்.
அங்கு வர்த்தகர்களுக்கு மீன்களை விநியோகம் செய்துகொண்டிருந்த பலர், ஜூரோங் துறைமுகத்திற்கு இடம் மாறியதாக மீன் கடைக்காரர்கள் பலர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தனர்.
ஜூரோங் மீன்பிடி வர்த்தகத் துறைமுகத்தில் 100க்கும் மேற்பட்டோர் மீன்களை விநியோகம் செய்துவந்துள்ளனர்.
தினந்தோறும் அங்கு சுமார் 3,000 பேர் விற்பனைக்காக மீன்களை வாங்குவதுண்டு. சினோக்கோவிலோ சிறிய அளவில்தான் மீன் விநியோகம் செய்யப்பட்டுவந்துள்ளது. அங்கே 25 பேர் மட்டுமே மீன்களை விநியோகித்து வருகின்றனர். தினந்தோறும் 700லிருந்து 1,000 வர்த்தகர்கள் வரை விற்பனைக்காக அங்கு மீன் வாங்குவர்.

