மூன்று நாட்களில் $70,000 இழப்பு
வேலை தருவதாக ஆசை காட்டி நடத்தப்பட்ட மோசடியில் ஒரு பெண் மூன்று நாட்களில் 70,000 வெள்ளியை இழந்தார்.
அமேண்டா (புனைபெயர்) என்ற அந்தப் பெண் முதலில் சமூக வலைத்தளங்களில் சில காணொளிகளுக்கும் கருத்துகளுக்கும் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார். அதன்மூலம் அவருக்கு இரண்டு வெள்ளி கிட்டியது.
ஆனால் அதற்குப் பின்னர் அவர் 70,000 வெள்ளியை இழக்க நேரிட்டது. எஃபிலியேட் மார்க்கெட்டிங் எனப்படும் இணையம் வழி நடத்தப்படும் ஒரு வகை வர்த்தகத்திற்கு மக்களை ஈர்த்து இத்தகைய மோசடிகள் நடத்தப்படுகின்றன. பகுதிநேரமாக வேலை தருவதாகச் சொல்லி ஃபேஸ்புக், வாட்ஸப் ஆகியவை வாயிலாக மோசடிக்காரர்கள் மக்களை ஈர்த்துவருகின்றனர்.
சென்ற ஆண்டு மட்டும் இத்தகைய மோசடி சம்பவங்கள் குறித்து 133 புகார்கள் வந்ததாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது. அவற்றில் மொத்தமாக சுமார் 220,000 வெள்ளி ஏமாற்றிப் பறிக்கப்பட்டது.
மோசடிக்காரர்களிடம் ஏமாறாமல் இருக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை மக்களை எச்சரித்துள்ளது. பணம் சம்பாதிப்பது சிரமமாக இருக்கக்கூடிய இந்தக் காலகட்டத்தில் மேலும் விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியம் என்பதை அது வலியுறுத்தியது.
கொவிட்-19: குணமடைந்தோருக்கு ஒரு முறை தடுப்பூசி பரிந்துரை
கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டு குணமடைந்தோர் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு முறை தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் எனக் கிருமித்தொற்று எதிர்ப்பு வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஏற்கெனவே கொவிட்-19 தொற்றுக்கு ஆளானோரிடம் எந்த அளவு எதிர்ப்பு சக்தி இருக்கும், எத்தனை காலத்திற்கு அது நீடிக்கும் போன்ற விவரங்கள் சரியாக இல்லாததால் இவ்வாறு பரிந்துரைக்கப்படுகிறது.
ஒரு சிலர் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு இரண்டு முறை ஆளாகியிருக்கின்றனர். குணமடைந்தோரிடையே எதிர்ப்பு சக்தி நாளடைவில் குறைந்துவரும் என்பதையும் ஆய்வுகள் காட்டுகின்றன.
கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகி குணமடைந்தோருக்கு, குறைந்தது ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு முறை தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன்னுரிமை வழங்கப்படும் என சுகாதார அமைச்சு சென்ற மாதம் அறிவித்தது.
அதற்குக் காரணம், குணமடைந்த பின் சுமார் ஆறு மாதங்களுக்குச் சம்பந்தப்பட்டவரின் உடலில் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்.
பேரகான் கடைத்தொகுதியில் மின்தூக்கி பராமரிப்பாளர் காயம்
பேரகான் கடைத்தொகுதியில் நேற்று நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் மின்தூக்கி பராமரிப்பாளர் ஒருவர் காயமுற்றார். மின்தூக்கி செல்லும் சுரங்கத்தின் கீழ்ப்பகுதியில் இருந்த அவரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் மீட்டனர்.
நேற்று மாலை சுமார் 4.20 மணிக்கு சம்பவம் குறித்து தகவல் வந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் தெரிவித்தது. ஏணியைக் கொண்டு முதல் மாடியிலிருந்து மின்தூக்கி சுரங்கத்தின் கீழ்ப்பகுதிக்குச் சென்று காயமுற்ற பராமரிப்பாளரைப் படை காப்பாற்றியது.
மின்தூக்கி பராமரிப்பாளரின் உடலின் வலப் பக்கத்தில் காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவர் எவ்வாறு காயமுற்றார் என்பது குறித்து தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
மீட்கப்பட்ட பிறகு சிகிச்சைக்காக அவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

