இந்து இளங்கோவன்
விஜய் சேதுபதி, மடோனா நடிப்பில் தமிழ் திரையுலகில் வலம்வந்த 'கவண்' திரைப்படத்தை நம்மில் பலர் பார்த்திருப்போம். ஆனால் 'கவண்', பிரபல கவிஞரும் பாடலாசிரியரும் எழுத்தாளருமான கபிலன் வைரமுத்து இயற்றிய 'மெய்நிகரி' என்னும் நாவலை தழுவி உருவாக்கப்பட்டது என்பது படத்தை பார்த்து ரசித்த பலருக்கு தெரியாத ஒன்று.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக தமிழிலக்கிய வகுப்பில் பாடப்பொருளாக சேர்க்கப்பட்டுள்ள இந்நாவலை மையப்
படுத்தி 'மெய்நிகரி: ஒரு கவிபார்வை' என்னும் கவியரங்கை வாசிப்பு விழா 2021-ன் ஓர் அங்கமாக ஜூலை 10-ஆம் தேதி மெய்நிகர் பாணியில் படைத்தது இளம் எழுத்தாளர் வட்டம். இந்நிகழ்வில் கபிலன் கலந்துகொண்டு இளம் கவிஞர்களுக்கு உற்சாகமூட்டினார்.
பொதுவாக ஒரு கவியரங்கு பொதுவாக சமூக தலைப்புகளை ஒட்டியோ, குறிப்பிட்ட நபரை பற்றியோ அல்லது காப்பியங்களை அலசியோ நடக்கும்.
ஆனால் இந்த கவியரங்கில் மாறுபட்ட விதமாக பங்குபெற்ற ஏழு இளம் எழுத்தாளர்கள் மெய்நிகரி நாவலை படித்து அது முன்வைக்கும் கருத்துகளையும் சிந்தனைகளையும் விவாதங்களையும் காட்சிகளையும் உள்வாங்கிக்கொண்டு, தங்களது புரிதலை கவிதைகளாக வெளிப்படுத்தினர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் மிக சுவாரசியமான வகையில் படைக்கப்பட்டது இந்தக் கவியரங்கு. பங்குபெற்றவர்கள் படைத்த ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு பாணியில் கேட்பவர்களின் சிந்தனையைத் தூண்டியது.
நாவல் கூறும் கருத்துகளையும் தங்களது கற்பனைகளையும் ஒன்றுசேர்த்து கவிதை வடிவில் படைத்து எழுத்தாளரை வியப்பில் ஆழ்த்தினர் இளையர்கள்.
"இந்த நிகழ்வின் வழி சில சிங்கப்பூர் தமிழ் இளையர்களின் கவிதை ஆர்வத்தை இணைப்பதற்கான ஒரு கருவியாக எனது நாவல் அமைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது."
"முதலில் ஒரு நாவலிலிருந்து திரைக்
கதையாக மாறிய மெய்நிகரி. இப்போது கவிதையாக மாறியிருக்கிறது," என்றார் ஒரு பார்வையாளராக மாறி கவிதைகளை ரசித்து மகிழ்ந்த திரு கபிலன்.
தமிழில் தனியார் தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளின் உருவாக்கத்தில் மூன்று ஆண்டுகளாக பங்குபெற்ற திரு கபிலன், அங்கு பெற்ற அனுபவங்களையும் அவரை பாதித்த சம்பவங்களையும் கற்பனை கலந்த கதையாக வடிவமைத்திருக்கிறார்.
இந்த கவிபார்வை, ஊடகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவை ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தைப் பற்றி இளையர்கள் கொண்டுள்ள பார்வையையும் வெளிக்கொணர்ந்தது.
நிகழ்வின் இறுதியில் எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, பங்கேற்பாளர்கள் படைத்த கவிதைகளில் தம்மை அதிகம் கவர்ந்ததாக 'ஊடகத் தமிழ்' என்னும் கவிதையை தேர்வு செய்தார்.
இக்கவிதையை இயற்றியவர், மென்பொருள் துறையில் பணியாற்றிவரும் இராஜேஷ் குமார் தர்மலிங்கம், 35. ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் வாசிப்பு விழாவில் இவர் தவறாது பங்கெடுத்து வருகிறார்.
ஊடகத் தமிழின் வரலாறு, அதன் நன்மைகள், பாதிப்புகள் போன்றவற்றை தமது கவிதையில் அடக்கியிருந்த
இராஜேஷ், தமது கவிதையின் முடிவை 'மெய்நிகரி' நாவலின் முடிவை போன்றே அமைத்திருந்தது பார்வையாளர்களையும் எழுத்தாளரையும் ஒருசேரக் கவர்ந்தது.
நகைச்சுவையுடன் மிக இயல்பாக, கலகலப்பாக நிகழ்ச்சியை வழிநடத்தி சென்றனர் இளம் நெறியாளர்கள் மிருதுளா குமார் மற்றும் அஜ்மினா பானு.
வாசிப்பு விழா 2021-ன் அடுத்த சில தமிழ் நிகழ்ச்சிகளின் விவரங்கள் அறிய: www.nationalreadingmovement.sg/readfest/programmes

