சிங்கப்பூரில் பணவீக்கம் இவ்வாண்டு மாற்றமின்றி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், பணவீக்க விகிதங்கள் மீது கொவிட்-19 குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும் என்று 'சிண்டெக்ஸ்' எனப்படும் சிங்கப்பூர் பணவீக்க எதிர்பார்ப்புகளுக்கான குறியீடு, ஆக அண்மைய காலாண்டில் வெளியிட்ட தனது கருத்தாய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
டிபிஎஸ் வங்கியும் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகமும் (எஸ்எம்யு) இணைந்து வெளியிட்ட இந்தக் கருத்தாய்வில் கலந்துகொள்ள சிங்கப்பூர் குடும்பங்களைப் பிரதிநிதிக்கும் கிட்டத்தட்ட 500 தனி
நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒட்டுமொத்த பணவீக்க எதிர்பார்ப்பு கள் மார்ச் மாதத்திற்கும் ஜூன் மாதத்திற்கும் இடையே மாறவில்லை. இது, 2012ஆம் ஆண்டு முதலான ஆண்டுகளின் இரண்டாம் காலாண்டில் பதிவாகும் சராசரி விகிதமான 3.3 விழுக்காட்டைக் காட்டிலும் குறைவாக உள்ளது.
இந்த விகிதம் கடந்தாண்டு செப்டம்பர் முதலான காலாண்டுகளின்போது ஏறுமுகமாக இருந்தபோதும் தற்போது குறைந்துள்ளது.
இரண்டாம் கட்டத் தளர்வு நடவடிக்கை, மூன்றாம் கட்டத் தளர்வு நடவடிக்கை (உச்சக்கட்ட எச்சரிக்கை நிலை) ஆகியவற்றின்கீழான கடுமையாக்கப்பட்ட பொதுச் சுகாதார நடவடிக்கைகளும் கொரோனா கிருமியின் புதிய உருமாற்றங்களும் சிங்கப்பூரின் தடுப்பூசி விநியோக நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள நற்பலன்கள் மட்டுப்படுத்தியுள்ளதாக டிபிஎஸ் வங்கியும் எஸ்எம்யுவும் அறிக்கை ஒன்றில் தெரிவித்தன.
கொவிட்-19 பணவீக்கத்தின்மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருத்தாய்வில் பதிலளித்தோரில் 70 விழுக்காட்டினர் தெரிவித்தனர். இந்த விகிதம் மார்ச் மாத ஆய்வறிக்கையில் 67 விழுக்காடாக இருந்தது.
பணவீக்கத்தின்மீது கொவிட்-19 நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்போரின் விகிதம் மார்ச் மாதத்தில் இருந்த 67 விழுக்காட்டிலிருந்து ஜூன் மாதத்தில் 73 விழுக்காட்டுக்கு உயர்ந்தது. பணவீக்கம் இவ்வாண்டின்போது சற்று மிதமான பிறகு அது குறித்த எதிர்பார்ப்புகள் சீரடைந்திருக்கலாம் என்றும் பொருளியல் மெல்ல
திறப்பது, தடுப்பூசி முறை மீது வாடிக்கையாளர்களின் நம்பிக்கை கூடியது ஆகியவை காரணம் என்றும் டாக்டர் டைமுர் பய்க் தெரிவித்தார்.
"பொருளியலின் திறப்பிற்கான காலம் மற்றும் அளவு குறித்துத் தொடரும் நிச்சயமின்மையை இது பிரதிபலித்திருக்கக்கூடும். சம்பளம், விலைவாசி மற்றும் வாடிக்கையாளர் தேவையின் அதிகரிப்பை இது பாதிக்கலாம்," என்று டாக்டர் பய்க் கூறினார். திருத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்ப்புகளின் விகிதம் மார்ச் மாதத்தில் இருந்த 3.1 விழுக்காட்டிலிருந்து ஜூன் மாதத்தில் 3 விழுக்காட்டுக்கு குறைந்தது.
ஒட்டுமொத்தமாக பணவீக்கம் தொடர்பான எதிர்பார்ப்புகள் அவ்வளவாக மாறவில்லை என்று டிபிஎஸ்ஸும் தெரிவித்தது. கேளிக்கை, கலாசாரம், ஆடைகள், காலணி மற்றும் இதர பொருட்களின் மீதான பணவீக்க எதிர்பார்ப்புகள் குறைந்துள்ளன.
இதற்கு நேர்மாறாக வீட்டுப்பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

