சீக்கா எனப்படும் சிங்கப்பூர் - இந்தியா இடையிலான விரிவான பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பான தனது நிலைப்பாடு இன அடிப்படையானதல்ல என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி தெரிவித்துள்ளது.மாறாக, உள்ளூர் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் ஆகியோரின் வேலைகளைப் பற்றியது என்று அது கூறியது.
"சிங்கப்பூரர்கள் நியாயமான வகையில் நடத்தப்பட வேண்டும். அவர்களது வேலைகளும் சம்பளமும் பாதுகாக்கப்பட வேண்டும். இவற்றில்தான் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.
"அனைத்து சிங்கப்பூரர்களுடனும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி ஒற்றுமையுடன் இருக்கிறது.
"அனைத்து சிங்கப்பூரர்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம். சிங்கப்பூரின் அடிப்படைப் பண்புநெறிகளைப் பாதுகாப்பது, மேம்படுத்துவது ஆகியவற்றுக்குத் தொடர்ந்து நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம்.
"சிங்கப்பூரின் எதிர்காலத்தில் கவனம் செலுத்துவோம்," என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி தெரிவித்தது.

