தமிழ் முரசு வாசகர் திருமதி ஆர். யமுனா நேற்று பிடோக் கடைத்தொகுதிக்குச் சென்றபோது இருவர் மட்டும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட அனுமதி என்று அங்குள்ள பெரும்பாலான விரைவு உணவகங்களின் வெளியே அறிவிப்புகள் ஒட்டப்பட்டிருந்ததைக் கவனித்தார்.
உணவகம் ஒன்றுக்குள் சென்ற போது, 'ஹெல்த்ஹப்' செயலிக்குள் சென்று முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டதை பணியாளர் களிடம் காட்டவேண்டியிருந்தது.
மெக்டோனல்ட்ஸ், பர்கர் கிங், சப்வே உள்ளிட்ட பல விரைவு உணவகங்கள், முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டாலும் அதிகபட்சம் இருவர் மட்டுமே சேர்ந்து அமர்ந்து உண்ணலாம் என்று கூறியுள்ளன.
நாளை தமது நண்பர்கள் இருவருடன் நீண்டநாட்களுக்குப் பிறகு ஒன்றாக வெளியில் சாப்பிடும் திட்டத்தை மாற்றிக்கொண்டதாக அவர் தமிழ் முரசிடம் கூறினார்.
கொவிட்-19 மிக வேகமாக அண்மைய நாட்களில் பரவி வருவதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 8 வரை, இரண்டு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டால் ஐவர் வரை ஒன்றாக அமர்ந்து உண்ணலாம் என்று அரசாங்கம் அறிவித்தது. ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உணவகங்களில் தனியாக அல்லது இருவராக மட்டும் அமர்ந்து உண்ணலாம் என்று அரசாங்கம் கூறியது.
அதனால் எவ்வளவு வாடிக்கையாளர்களை அனுமதிப்பது என்பதை பல உணவகங்கள் தாங்களாகவே தீர்மானித்துள்ளன.

