கொவிட்-19 தொற்றினால் மூத்தோருக்குதான் மிக மோசமான நோய் அறிகுறிகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் கூடுமானவரை விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
மூத்தோர் தடுப்பூசி நிலையங் களுக்கு நேரடியாகச் சென்று அல்லது இணையத்தளத்தில் பதிந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அமைச்சு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள 70 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுள்ள சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. ஆனாலும் அந்த வயதினர்தான் ஆகக் குறைவாக தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையே இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத முதியவர்கள் முடிந்தவரை வீட்டில் இருக்கும்படியும் அவசியமான தேவைகளுக்காக மட்டுமே வெளியில் செல்லும்படியும் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் மூத்தோரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
நடமாட்டத்தையும் சந்திப்புகளையும் கட்டுப்படுத்துவதன் வழி, தொற்றும் மோசமான நோய் ஏற்படுவதைத் தடுக்கமுடியும் என்று கொவிட்-19 அமைச்சுநிலைப் பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு வோங், தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறினார்.
தாங்கள் தடுப்பூசிப் போட்டுக்கொண்டபோதும் அதனைப் போட்டுக்கொள்ளாத முதியவர் களுடன் ஒரே வீட்டில் வசிப்பவர்களும் பாதுகாப்பு நடைமுறை களைக் கடைப்பிடிக்க வேண்டும் வேண்டும் என்றார் அமைச்சர்.

