ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தில் உயர்நிலை ஒன்றிலிருந்து நான்கு வரையில் படிக்கும் மாணவர்கள் நேற்று வீட்டிலிருந்து பாடம் கற்கும் நடைமுறைக்கு மாறினர்.
பள்ளிச் சிற்றுண்டியகத்தில் பணியாற்றும் கடை உதவியாளருக்கு கடந்த சனிக்கிழமை தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நேற்று பள்ளிச் சிற்றுண்டி யகத்தைச் சுத்தப்படுத்தி அங்கு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்தன. பள்ளி நிர்வாகம் அதுகுறித்து பெற்றோருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கடிதம் அனுப்பியது.
இவ்வேளையில் யாங்ஸெங் தொடக்கப்பள்ளியில் தொடக்கநிலை இரண்டில் படிக்கும் மாணவருக்கு தொற்று உறுதியானதால், அப்பள்ளியில் உள்ள தொடக்கநிலை இரண்டு மாணவர்கள் நேற்று வீட்டிலிருந்து கற்கும் முறைக்கு மாறினர். வரும் புதன்கிழமை வரை அவர்கள் வீட்டில் இருந்தபடி பாடம் கற்பார்கள்.
அந்த மாணவர் கடைசியாக கடந்த வியாழக்கிழமை பள்ளிக்குச் சென்றிருந்தார்.
அண்மை நாட்களில் தொற்று அதிகரித்ததன் காரணமாக உடலுறுதி விளையாட்டுகள், நடனம் ஆகியவை தொடர்பான இணைப்பாட நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை 50லிருந்து 30க்குக் குறைக்கப்பட்டது.
குழுக்களிள் அளவும் ஐந்திலிருந்து இரண்டாகக் குறைக்கப்படும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கல்வி அமைச்சு கூறியது. புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் நேற்று நடப்புக்கு வந்ததாகக் கூறப்பட்டது.

