எஸ்.வெங்கடேஷ்வரன்
ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் சிங்கப்பூர் இந்திய மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) தீவு முழுவதும் உள்ள 61 இந்திய முஸ்லிம் குடும்பங்களுக்கு இலவச உணவுப் பொட்டலங்களை வழங்கியது.
21 தொண்டூழியர்களின் உதவியால் மொத்தம் 265 உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
கொவிட் பெருந்தொற்று தொடர்ந்து பல்வேறு நிலைகளில் மக்களின் தினசரி வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது என்றும் இந்த முயற்சிக்கு நன்கொடையாளர்கள், தொண்டூழியர்கள் என்று பல நல்லுள்ளங்கள் பின்புலத்திலிருந்து பேருதவி செய்துள்ளனர் என்றும் சொன்னார் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு ராஜேந்திரன்.
"கொவிட்-19 கிருமித்தொற்றிலிருந்து மீண்டு வர ஒவ்வொரு
வரும் தன்னிலையில் முயற்சித்து வருகின்றனர்.
"அவர்களுக்கு உற்சாகமும் அதே நேரத்தில் தொடர்ந்து போராட உத்வேகமும் அளிப்பதே சிண்டாவின் நோக்கம்," என்றார் திரு அன்பரசு.
65 வயது தொழில் முனைவரான திரு யூசோஃப் ரஹ்மானின் நிதி ஆதரவில் இத்திட்டம் நடந்தேறியது.
நெய்ச் சோறு, இறைச்சிக் குருமா, பொரித்த கோழி, கத்திரிக்காய் பச்சடி ஆகிய உணவு வகைகள் கொண்ட உணவுப் பொட்டலங்களை இஸ்லாமிக் உணவகம் தயாரித்தது.
"கடந்த 15 ஆண்டுகளாக நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் போன்ற விழாக் காலங்களில் வசதி குறைந்த குடும்பங்களுக்கு சமைத்த உணவு நன்கொடையாக வழங்கி வருகிறோம். சிண்டா மட்டுமல்லாமல் மரீன் பரேட், தாமான் ஜூரோங் போன்ற வட்டாரங்களில் உள்ள வசிப்போர் குழுக்களுடனும் இணைந்து பணிபுரிகிறோம். நன்கொடையாக உணவு வழங்கினாலும் உயர்ந்த தரத்துடன், குறைந்த விலையில் வழங்குகிறோம்," என்றார் இஸ்லாமிக் உணவகத்தின் உரிமை யாளரான திரு கலிலூர் ரஹ்மான், 60.
மதிய உணவு நேரத்திற்குள் உணவை விநியோகம் செய்யவேண்டிய இலக்கிலும் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க
தொண்டூழியர்களை நிர்வகிப்பதிலும் சிண்டா சிறப்பான முயற்சி எடுத்தது என்று குறிப்பிட்டார் தொண்டூழியர் திருமதி விக்னேஸ்வரி ரெத்தினம், 41.
"செங்காங், பொங்கோல் வட்டாரங்களில் அமைந்துள்ள நான்கு வீடுகளுக்குச் சென்று கிட்டத்தட்ட 15 பொட்டலங்களை விநியோகித்தேன்.
"சீராகவும் பாதுகாப்பாகவும் தொண்டூழியர்கள் சிங்கப்பூரின் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று உணவை விநியோகம் செய்தனர்.
"கொவிட்-19 நேரத்தில் அவதிப்படும் குடும்பங்களுக்கு உதவி புரிய முடிந்தது மனதிற்கு நிறைவான அனுபவமாக அமைந்தது," என்றார் ஆசிரியராகப் பணியாற்றும் விக்னேஸ்வரி.

