அண்டை நாடான இந்தோனீசியாவில் கொவிட்-19 பாதிப்பு அதிகரித்துள்ளது. கிருமித்தொற்றை எதிர்த்துப் போராடும் இந்தோனீசியாவுக்கு உதவும் வகையில் சிங்கப்பூர் அரசாங்கம் அந்நாட்டுக்கு அடிக்கடி உயிர்வாயுத் தோம்புகளை விநியோகம் செய்ய இருக்கிறது. இந்தோனீசியா கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஆக்சிஜன் ஷட்டல் எனும் திட்டத்தின்கீழ் உயிர்வாயுத் தோம்புகள் அனுப்பி வைக்கப்படும்.
இத்திட்டத்தின்கீழ் இந்தோனீசியாவுக்கு 500 டன்னுக்கும் அதிகமான உயிர்வாயு நேற்று முதல் அடுத்த மாதம் வரை அனுப்பி வைக்கப்படும்.
இந்நிலையில், சிங்கப்பூர் அனுப்பி வைத்த 80 டன் உயிர்வாயுத் திரவத்தைக் கொண்ட நான்கு ஐஎஸ்ஓ தோம்புகள் இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள தஞ்சோங் பிரியோக் துறைமுகத்தை நேற்று அடைந்தன.
ஆக்சிஜன் திரவங்களைக் கொண்ட தோம்புகள் மட்டுமல்லாது, இம்மாதம் 9ஆம், 11ஆம் தேதிகளில் இந்தோனீசியாவுக்கு செயற்கை சுவாசக் கருவி உட்பட பல்வேறு மருத்துவ சாதனங்களை சிங்கப்பூர் அனுப்பி வைத்தது.

