முயல் ரத்தக்கசிவு நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை
முயல் ரத்தக்கசிவு நோய் சிங்கப்பூரில் முதன்முதலாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தலைதூக்கியது. தனியார் விலங்கியல் மருந்தகத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட சில முயல்கள் அந்நோயால் பாதிக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து அங்கிருந்த விலங்கியல் மருத்துவர் உடனடியாக தேசிய பூங்காக் கழகத்திடம் தகவல் அளித்தார். பாதிக்கப்பட்ட சில முயல்கள் மாண்டுவிட்டன. இந்த நோய்க்குக் காரணமான கிருமி வகை மனிதர்களுக்குப் பரவாது என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு இந்தக் கிருமி சிங்கப்பூரில் பரவியதில்லை.
நோயின் தீவிரத்தைக் கண்டுபிடிக்க கழகத்தைச் சேர்ந்த சிறப்புக் குழு ஒன்று சம்பந்தப்பட்ட மருந்தகத்துக்குச் சென்று விசாரணை நடத்தியது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள முயல்கள் அளவுக்கு அதிகமாக மெலிந்து காணப்படக்கூடும். அல்லது சுறுசுறுப்பின்றி முடங்கிக்கிடக்கக்கூடும். வலி காரணமாக சத்தம் போடக்கூடும். பாதிக்கப்பட்ட முயல்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படக்கூடும்.
நோயால் அவதியுறும் விலங்குகளை கண்டுபிடிக்க நடவடிக்கை
நோயால் பாதிக்கப்பட்டுள்ள வனவிலங்குகளைக் கண்டுபிடிக்க கண்காணிப்புத் திட்டம் ஒன்று நடப்பில் உள்ளது. சிங்கப்பூரில் உள்ள விலங்குகளை மட்டுமின்றி பிற நாடுகளில் உள்ள விலங்குகளையும் திட்டம் கண்காணிக்கிறது.
சிங்கப்பூரில் உள்ள வௌவால்களிடம் கொரோனா கிருமி வகைகள் தென்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரைக் காப்பாற்றிய ஏழு பேருக்கு விருது
கடந்த மே மாதம் 30ஆம் தேதியன்று சுவா சூ காங் விளையாட்டரங்கத்தில் மெதுவோட்டம் ஓடிக்கொண்டிருந்த ஆடவர் ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்தார். அவர் 60 வயதிலிருந்து 70 வயதுக்கு உட்பட்டவர். இதய செயலிழப்பால் அவர் பாதிக்கபட்டார்.
அங்கிருந்த நால்வர் அவருக்கு உடனடியாக உதவினர். அவர்களில் ஒருவர் அவருக்கு சிபிஆர் எனும் சுயற்கை சுவாச உதவி செய்தார். ஏனைய மூவரும் உயிர்க்காப்பாளராகப் பணிபுரிபவர்கள். அவர்களில் ஒருவர் பாதிக்கப்பட்டவருக்கு சுவாச உதவி சாதனத்தைப் பொருத்தினார். இந்த நால்வரும் ஆம்புலன்சை அழைத்தனர்.
ஆம்பலன்ஸ் வருவதற்கு முன்பே பாதிக்கப்பட்ட ஆடவருக்கு சுயநினைவு திரும்பியது.
இந்த நால்வருடன் சேர்த்து ஏழு பேருக்கு நேற்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சமூக உயிர்க்காப்பாளர் விருதுகளை வழங்கியது.
தேசிய தின அணிவகுப்பு முன்னோட்டம்; 16 பேருந்துச் சேவைகளில் மாற்றம்
வரும் சனிக்கிழமையன்று நடைபெற இருக்கும் தேசிய தின அணிவகுப்பு முன்னோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் 16 பேருந்துச் சேவைகளில் மாற்றம் ஏற்படும். பேருந்து எண் 10, 14, 16, 56, 57, 70, 70M, 100, 111, 130, 131, 162M, 195, 196, 502 ஆகியவற்றின் பயணப் பாதை மாற்றி அமைக்கப்படும்.

